
posted 9th October 2021

அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல்
விவசாயிகள் இன்றைய சூழ்நிலையில் எந்த பசளையில் கூடிய குறைந்த உற்பத்தி வரும் என்ற சிந்தனையில் இருந்து வருகின்றனர். இதை விடுத்து இது விடயத்தில் அரசின் நீரோட்டத்தோடு இணைந்து செயல்படும் காலமாக இருப்பதால் அதற்கு கிராம அலுவலகர்கள் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட கிராம அலுவலர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி ஒன்று மன்னார் மாவட்ட செயலகத்தில் வெள்ளிக் கிழமை (08.10.2021) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மன்னார் அரசாங்க அதிபர் கலந்துகொண்டு கிராம அலுவலகர்கள் மத்தியில் உரையாற்றுகையில்;
உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பயிற்சி நெறிகள் ஆலோசனைகள் யாவற்றையும் நீங்கள் சீராக உள்வாங்கி எனக்கு பொறுப்புண்டு, நான் இதை திறமையாக செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் நல்லதொரு சேவையாளர்களாக நீங்கள் திகழ வேண்டும்.
அரசு தற்பொழுது இயற்கை உரம் செய்யும் விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றது.
07.10.2021 தினம் ஜனாதிபதி அவர்களுடன் இது விடயமான கலந்துரையடல் இடம்பெற்றது. நேற்றையத் தினம் (08.10.2021) இதன் அமைச்சுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
விவசாயப் பகுதியில் கடமைபுரிபவர்களுக்கும் மற்றும் வீட்டுத் தோட்டம் செய்வோர் மத்தியில் கடமைபுரியும் உங்களுக்கு மக்கள் மத்தியில் சேதன பசளை உற்பத்தி தொடர்பான ஒரு இலக்கு வழங்கப்படும்.
விவசாயிகள் இன்றைய சூழ்நிலையில் எந்த பசளையில் கூடிய குறைந்த உற்பத்தி வரும் என்ற சிந்தனையை விடுத்து, இதுவிடயத்தில் அரசின் நீரோட்டத்தோடு இணைந்து செயல்படும் காலமாக இருக்கின்றது. அதற்கு கிராம அலுவலகர்களாகிய நீங்கள் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
கிராம அலுவலர்கள் நீங்கள் உங்களுக்கு வழங்கப்படும் கடமைகளை உதறி தள்ளிவிட்டு சில காலம் நாம் இருக்கும் இடத்தில் அமைதியாக இருந்துவிட்டு சென்று விடலாம் என நினைத்தால் நீங்கள் ஒரு காலத்தில் வாழ்நாள் பூராகவும் கவலையுடன் வாழும் நிலை எற்படும்.
நாம் யாரிடமிருந்தும் தப்பலாம் ஆனால் நீங்கள் உங்கள் மனச்சாட்சியிடமிருந்து தப்பமுடியாது. மனச்சாட்சியுடன் கடமை செய்பவர்களுக்கு மனப்பலமும் மன மகிழ்வும் உண்டாகும் என்பதை மறந்து விடாதீர்கள்.
இங்கு பலர் மிகவும் கஷ்டமான சூழ்நிலைகளிலும் என்னுடன் இணைந்து அர்ப்பணிப்புடன் கடமைபுரிந்தவர்கள் இருக்கின்றார்கள் இப்பொழுது புதிதாக இணைந்தவர்களும் இருக்கின்றீர்கள் உங்களுக்கு அனுபவங்கள் இல்லாதிருக்கலாம் ஆனால் மிகவும் வறுமையிலும் துன்பத்திலும் வாழும் மக்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றார்கள் இதுவே உங்களுக்கு அனுபவம் தரக்கூடியதாக இருக்கும்.
உங்கள் பகுதியில் ஒரு குடும்பத்தைப்பற்றி கேட்டால் அவர்களின் முழு விபரங்களையும் தரக்கூடிய அலுவலராக நீங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்திலோ அல்லது கிராமத்திலோ பிரச்சனை தோன்றுமாகில் அதை தீர்க்கும் சக்தி உங்களிடம் இருக்கின்றது. அதை நீங்களே உருவாக்கிக்கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் நீங்கள் நல்ல அபிபிராயத்தையும் யாருக்கு கீழே கடமை புரிகின்றீர்களோ அவர்களுக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும்
சேதன பசளை மூலம் விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும் என்பது அரசின் இன்றைய நோக்கமாக இருக்கின்றது. இதன்மட்டில் கிராம அலுவலகர் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன
ஜனாதிபதி அவர்கள் இத் திட்டங்களை ஒவ்வொரு கிராம அலுவலகர்கள் ஊடாகவே முன்னெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். ஆகவே ஒவ்வொரு கிராம அலுவலர்களும் விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களை இவ்விடயத்தில் நீங்கள் ஊக்குவிக்க வேண்டும். அதாவது குப்பை கூளங்களை வெளியில் கொண்டு சென்று எரிப்பதைத் தவிர்த்து சேதன பசளையாக்குவதற்கான ஆலோசனைகளை நீங்கள் மக்களுக்கு வழங்க வேண்டும்.
நீங்கள் நிர்வாகம் செய்வது மட்டுமல்ல மக்களின் வாழ்வாதாரத்துக்கான பொருளாதார அபிவிருத்தியிலும் உங்களுக்கு பங்குண்டு என தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ