
posted 9th October 2021

கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மத்தியஸ்த சபைகளின் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைய, மத்தியஸ்த சபைகளின் பிணக்குகள் கலந்துரையாடல்களுக்கான அமர்வுகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உரிய மத்தியஸ்த சபைப் பிரதேசத்திற்குரிய பொது சுகாதாரப் பரிசோதகரின் ஒத்துழைப்பு, மற்றும் சுகாதார வழிகாட்டு தலுக்கமைய (கொவிட்) பிணக்கு கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட வேண்டும், மற்றும் பிணக்குகள் கலந்துரையாடலின்போது விரைவாக தீர்மானம் எட்டப்பட வேண்டிய பிணக்குகளுக்கு கலந்துரையாடலில் முன்னுரிமை வழங்கல் முதலான ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுடன் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பல வருடகாலமாக சிறப்புற இயங்கிவரும் நிந்தவூர் மத்தியஸ்த சபையின் பிணக்குகளுக்கான கலந்துரையாடல் அமர்வு இன்று சனிக்கிழமை முதல் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர் மத்தியஸ்தசபைத் தவிசாளர் திருமதி. பல்கீஸ் மஜீத் தலைமையில், நிந்தவூர் அல்-மதீனா வித்தியாலய மண்டபத்தில் மீள ஆரம்பிக்கப்பட்ட சபையின் முதல் அமர்வு இடம்பெற்றது.
மத்தியஸ்தர்கள் உட்பட பிணக்காளர்களும் கொவிட் - 19 சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி சபை அமர்வில் கலந்து கொண்டனர்.
மேலும் பிரதேச செயலகங்களில் அமைக்கப்படவுள்ள முறைப்பாட்டுப் பெட்டி தொடர்பில் பிணக்குதாரர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆவன செய்யுமாறு மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட மத்தியஸ்த பயிற்றுனர் எம்.ஐ.எம்.ஆஸாத் சபைத்தவிசாளர்களை அறிவுறுத்தியுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்