
posted 19th October 2021

நிந்தவூர் பிரதேச சபைப்பிரிவுக்குள் கட்டிட நிர்மாணங்களை முன்னெடுப்போர் உரிய வகையில், கட்டுமான அபிவிருத்திக்கான பிரதேச சபையின் முன் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் புதிய கட்டுமானப்பணிகளைப் பொது மக்கள் எவ்வித அறிவுறுத்தல்களையும் பெறாமல், நினைத்தமாதிரி மேற்கொள்வதாகவும், இதனால் பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெறுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்தே பிரதேசத்தில் பொது மக்கள் ஆரம்பிக்கும் கட்டிட நிரமாணங்களுக்குரிய, உரிய வரைபடம் காணி உறுதிகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபைக்கு ஆவணங்களைச் சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றக்கொள்ள வேண்டுமென பிரதேச சபையால் பகிரங்க அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதே வேளை மேற்கொள்ளப்படுகின்ற கட்டுமானப் பணிகளுக்கான கட்டிடப் பொருட்களை (கல், மண் போன்றவை) உள்ளுர் வீதிகளில் சேமித்து வைப்பதன் மூலம் பொதுப் போக்குவரத்துக்குப் பெரும் இடைஞ்சல் ஏற்படுவதால் அவ்வாறு வீதிகளில் சேமித்து இடைஞ்சல் ஏற்படுத்துவதைக் கண்டிப்பாகத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
அவ்வாறு சேமித்துள்ள பொருட்களை உடன் அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், இந்த அறிவித்தல் பொது மக்களால் அசட்டை செய்யப்படுமானால், வீதிகளில் சேமித்து வைக்கப்படுகின்ற கட்டிட நிர்மாணப்பொருட்களை தேவையற்றதாக கருத்திற்கொண்டு பிரதேச சபை அவற்றை அகற்றுவதுடன், அகற்றியமைக்கான முழுச் செலவினங்களையும் உரியவர்களிடமிருந்து அறவீடு செய்யப்படுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்