
posted 19th October 2021

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர், பரூஸா நக்பர் வகுத்துள்ள டெங்கு ஒழிப்புக்கான ஐந்து மாத வேலைத்திட்டத்திற்கு அமைவாக நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணனின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக குறித்த டெங்கு ஒழிப்புக்கான ஜந்து மாத வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான காத்திரமான செயல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி சகாதார வைத்திய அதிகாரி டாக்டர், பரூஸா நக்பர் தலைமையில் கள நடவடிக்கைகளில் பிரதேச சுகாதாரப் பரிசோதகர்கள், டெங்கு களத்தடுப்பு உத்தியோகத்தர்கள், தொண்டர் சேவையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே பொது மக்களிடையே டெங்கு தொடர்பான விழிப்பூட்டல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்சமயம் திடீர் பரிசோதனைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
இதன் போது டெங்கு நுளம்பு பெருகத்தக்கதாக தமது வீடுகள், வளவுகள் வர்த்தக நிலையங்கள், வெற்றுகாணிகளை வைத்திருப்போர் கண்டு பிடிக்கப்படுவதுடன், சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தினமும் பிரதேசமெங்கும் களப் பரிசோதணைகளும், டெங்கு பரவ ஏதுவான பொருட்கள் கழிவுகளை அகற்றும் பணிகளும் இடம் பெற்று வருகின்றன.
கொவிட் 19 வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் டெங்கு நோய் அபாய நிலை தோன்றியுள்ளமை பொது மக்களிடையே அச்ச நிலையை தோற்றுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்