
posted 13th October 2021
கடல் மீன்பிடிக்குப் பெயர் பெற்ற அம்பாரை மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கடல் மீன்பிடி ஆரம்பமாகியுள்ளது.
இதனால் பல மாத காலம் தொழிலின்றி வீடுகளில் முடங்கிக்கிடந்த அன்றாட வருமானத்தை நம்பி வாழும் தொழிலாளர்கள் கடற்றொழிலை நாடிய வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக கரைவலை மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களுக்கு தற்பொழுது மீன்படி ஆரம்பமாகியுள்ளது.
அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த நிந்தவூரில் இன்று புதன் கிழமை (13.10.2021) கரைவலை மீன்பிடியாளர்களுக்கு அமோக மீன்பிடி வாய்ப்பு கிட்டியுள்ளது.
நிந்தவூரிலுள்ள ஒரு கரைவலை தோணி சங்கத்தினருக்கு இன்று சுமார் ஏழு இலட்சம் ருபா பெறுமதியான சூரை எனப்படும் மீன் அமோகமாக பிடிக்கப்பட்டுள்ள அதே வேளை பரவலாக சுமார் பத்து லட்சம் பெறுமதியான மீன்கள் பிடிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்
மேலும் இவ்வாறு சூரை இன மீன் பிடிக்கப்பட்ட தகவலறிந்து வெளியூர் மீனவர்கள் பலர் நிந்தவூர் கடற்கரைப் பிரதேசத்திற்கு படையெடுத்து மீன்களை கொள்வனவு செய்ததுடன், ஸ்தலத்திலையே வைத்து குளிருட்டலுடன் பெட்டிகளிலிட்டு கொழும்பு போன்ற பிற முக்கிய நகரங்களுக்கு மொத்த வியாபாரத்திற்காகவும் எடுத்து சென்றனர்.
இதே வேளை உள்ளுர் வியாபாரிகளுக்கும் இந்த மீன்கள் வழங்கப்பட்டதால் உள்ளுரில் பொது மக்களுக்கும் குறைந்த விலைகளில் மீன்களை பெறவும் முடிந்தது.
எனினும் மொத்த வியாபாரிகளுக்கே, கரைவலை மீன்பிடியாளர்கள் கூடியளவு மீன்களை மொத்தமாக வழங்கி விட்டதாகவும் உள்ளுர் வியாபாரிகள் விசனமும், கவலையும் வெளியிட்டனர்.
மீன்பிடியும், விவசாயமுமே அம்பாரை மாவட்ட மக்களின் முக்கிய தொழில்களாகுமென்பது குறிப்பிடதக்கது.

ஏ.எல்.எம். சலீம்