
posted 7th October 2021

மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்
கல்முனை மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்து வரும் கட்டாக்காலி ஆடு, மாடுகளின் தொல்லையை ஒழித்துக்கட்டுவதற்கு மாநகர சபை முதல் வரால் பிறப்பிக்கப்பட்டுள்ள பணிப்புரை நாளை வெள்ளிக்கிழமை முதல் அமுல் நடத்தப்படவிருக்கின்றது.
இதன்படி மேற்படி மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் கட்டாக்காலிகளாகத் திரிந்து, கைப்பற்றப்படும் ஒவ்வொரு ஆடு அல்லது மாட்டிற்கும் தினம் ஒன்றுக்கு 5000 ரூபா வீதம் தண்டப்பணம் மாநகர சபையால் அறவிடப்படவுள்ளது.
குறிப்பாக கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் கட்டாக்காலி ஆடு, மாடுகளின் தொல்லைகள் அதிகரித்திருப்பதால், அவற்றைக் கைப்பற்றி, உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிட நடவடிக்கை எடுக்கபட்டிருக்கிறது.
இவ்வாறு கைப்பற்றப்படும் ஒவ்வொரு ஆடு அல்லது மாட்டுக்கும் நாள் ஒன்றுக்கு 5000 ரூபா வீதம் தண்டப்பணம் அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை மாநகர பிரதேசங்களில், குறிப்பாக பிரதான வீதிகள், சந்தைகள், பஸார்கள் மற்றும் பொது இடங்களில் கட்டாக்காலிகளின் தொல்லைகள் மீண்டும் அதிகரித்திருப்பதாகவும் இதனால் வாகன விபத்துகள் இடம்பெறுவதுடன் பயணிகளும் வர்த்தகர்களும் நுகர்வோரும் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் மாநகர சபைக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வருகின்றன.
இது சம்பந்தமாக பல தடவைகள் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டும், கட்டாக்காலிகளின் உரிமையாளர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதாகத் தெரியவில்லை.
இவற்றைக் கவனத்தில் கொண்டு, மேற்படி நடவடிக்கையை முன்னெடுக்குமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள், சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எனவே, குறித்த கட்டாக்காலி ஆடு, மாடுகளின் உரிமையாளர்கள், அவற்றை மிகவும் பொறுப்புடன் தமது இடங்களில் வைத்துப் பராமரிக்குமாறு இல்லையேல், மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நாளை முதல் குறித்த கட்டாக்காலிகள் கைப்பற்றப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து மேற்கூறப்பட்ட பிரகாரம் தண்டப்பணம் அறவிடப்படும் என கல்முனை மாநகர சபை எச்சரிக்கை விடுத்துள்ளது
தவறும் பட்சத்தில் கட்டாக்காலிகளாகத்திரிந்து கைப்பற்றப்படும் ஒவ்வொரு ஆடு அல்லது மாட்டிற்கும் தினம் ஒன்றுக்கு 5000 ரூபா வீதம் தண்டப்பணம் அறவிடும் திட்டம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னரும் பல தடவைகள் கட்டாக்காலிகள் பல கைப்பற்றப்பட்டு, தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கையை கல்முனை மாநகர சபை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்