தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25 ஆண்டுகள் நிறைவு! பேராசிரியர் எம்.ஐ.எம் கலீல்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இன்று (23) சனிக்கிழமை அதன் 25 ஆவது ஆண்டை நிறைவு செய்து வெள்ளி விழாவை கொண்டாடுகிறது.

இன்று இந்த பல்கலைக்கழகம் அனைத்து வசதிகளுடன் கூடிய சர்வதேச தரத்திலான இலங்கையின் தேசிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மிளிர்வதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.எம். ஜெமீல் (கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்) என்ற மாணவர் தலைமையேற்று நடத்திய கிழக்குப் பல்கலைக்கழக பாதிக்கப்பட்ட மாணவர் பேரவை மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மாணவர் சம்மேளனம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகளின் போராட்டங்களுமே காரணமாகின.

இந்த மாணவர் போராட்டங்களை வெற்றிகரமாக முன்னோக்கி நகர்ந்துவதற்கு அன்றைய இணைந்த பல்கலைக்கழகக் கல்லூரியின் பணிப்பாளராகவிருந்த பேராசிரியர் எம்.வை.எம். சித்தீக்கின் (தற்போது லண்டனில் வாழ்கிறார்) வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் மட்டுமல்லாது அவர் வழங்கிய ஆவணங்கள் ரீதியான உதவிகளும் பேருதவியாகவும் உந்து சக்தியாகவும் அமைந்தன.

இவரே இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான அமைச்சரவை பத்திரத்தையும் தயார் செய்து கொடுத்து முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரஃபின் பல்கலைக்கழகம் தொடர்பான நகர்வுகளுக்கும் பக்கபலமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெமீலின் தலைமையில் அவரது தோழர்களும் அன்றைய மாணவர்களுமான கலாநிதி எம்.எச் தௌபீக், ஏ. எல் அப்துல் மஜீத், மற்றும் அப்போதைய பேராதெனிய பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்ஸிஸ் சார்பாக எம்.ஐ.எம் சதாத், கலாநிதி ஏ.எல். ஐயூப்கான் உள்ளிட்ட துடிப்புள்ள இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டக் குரல் தேசத்தினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை திருப்பியது.

அன்றைய கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய முஸ்லிம் விரிவுரையாளர்களான பேராசிரியர் எம்.ஐ.எம் கலீல், பேராசிரியர் எம்.எஸ்.எம் ஜலால்டீன், பேராசிரியர் கே. இஸ்ஹாக், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எஸ். ஆலீப், எம்.எம்.எம். றபீக் மௌலவி, மற்றும் மர்ஹும் கலாநிதி ரசாக் மௌலவி உள்ளிட்டவர்கள் ஜெமீல் அணியினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கு பக்கபலமாக இருந்தனர்.

மேலும் கலாநிதி தௌபீக், அக்கரைப்பற்றை சேர்ந்த ஆஹிர், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த யாசின், ஒலுவிலைச் சேர்ந்த ஹூசைன், நிந்தவூரைச் சேர்ந்த தஸ்லீம், பாயிஸ், சம்மாந்துறை சல்பியா, கல்முனைக்குடியைச் சேர்ந்த தாஹிர், மருதமுனை சியாத், காத்தான்குடி பேராசிரியர் முஸ்தபா, ஓட்டமாவடியைச் சேர்ந்த சித்தீக் ஆகியோரின் பங்களிப்பும் போராட்டத்துக்கு மேலும் வலு சேர்த்தது.

இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அக்கரைப்பற்று உதுமாலெவ்வையும் முக்கியமான ஒருவர். மேலும் அட்டாளைச்சேனையில் பல்கலைக்கழகத்துக்கு இடம் ஒதுக்குவது தொடர்பில் கல்வியல் கல்லூரிக்கு தலைவராகவிருந்த மருதமுனை அஸீஸும் முக்கியமானவர்.

மேலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை ஸ்தாபிக்கும் செயலணியில் கல்முனை கே. ஜவாத், எம்.ரி. ஹஸன் அலி, மன்சூர் ஏ காதர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மாணவர் சம்மேளனத்தின் முக்கியஸ்தர்காக முக்கிய பதிவிகளை வகித்த எம்.எச்.எம் ஹலீம், சீ. எம். ஏ முனாஸ் ஆகியோரின் பங்களிப்பும் மறக்க முடியாதவை.

இவர்களின் பங்களிப்பின் காரணமாகவே முஸ்லிம் மாணவர் சம்மேளனத்தை கௌரவப்படுத்துவதற்காக அஷ்ரஃபினால் இவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களாக முதன் முதலாக நியமிக்கப்பட்டனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா சென்றார். அவர் இங்கிருந்து மக்காவுக்கு செல்லும் முன்னர் ஜெமீலுடன் தற்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொப்பி முஹிதீனையும் முழுமையாக இந்த விடயத்தில் ஈடுபடுமாறு தெரிவித்துச் சென்றிருந்தார்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழு தலைவரை சந்திப்பதற்கு ஜெமீலை அழைச் சென்றிருந்ததனையும் இங்கு நினைவு கூர வேண்டும்.

மேலும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அவசியம் தொடர்பில் வெளியான நூலை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு செல்லும் பொறுப்பை ஜெமீலிடமே அஷ்ரப் ஒப்படைத்திருந்தார். அதற்கான உதவி, ஒத்ததாசைகளை முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வர் வழங்கியிருந்தார்.

இந்நிலையில், குறித்த நூலை நாடாளுமன்றத்தில் காட்டிய முன்னாள் அமைச்சர் அஷ்ரப் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தேவை தொடர்பில் மிகக் காத்திரமாக சபையில் உரையாற்றினார்.

இவ்வாறான பின்னணிகளிலேயே இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 1978 ஆம் ஆண்டு 16 ம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 24 ஆம் பிரிவுக்கமைய பல்கலைக்கழக கல்லூரியாக 1995 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் திகதி நிறுவப்பட்டது. பின்னர் அது 1995 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி சுயாதீனமான பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது.

அதன் ஸ்தாபக உபவேந்தராக பேராசிரியராக எம்.எல்.ஏ. காதரும் ஸ்தாபக பதிவாளராக ஏ.எல். ஜெவ்பர் சாதிக்கும் ஸ்தாபக நிதியாளராக குலாம் ரஸஸுத்தும் நியமனம் பெற்றனர்.

இன்று இலங்கையின் முக்கிய அறிவுப் பொக்கிஷமாக இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் அதாவது அம்பாறை ஒலுவிலில் அமைந்துள்ளது.

இது இலங்கையின் பத்தாவது தேசிய (அரச) பல்கலைக்கழகமாகும். இதன் பிரயோக விஞ்ஞான பீடமானது சம்மாந்துறை பிரததேசத்தில் அமைந்துள்ளது. எதிர்காலத்தில் இந்த பல்கலைக்கழகத்தின் பீடங்கள் தென்கிழக்கின் பல பிரதேசங்களின் கல்விக்கான அடையாளங்களாக அமையவிருக்கின்றன. ஒலுவில் வளாகமானது அம்பாறையின் கரையோர மாவட்டமான ஒலுவிலில் கொழும்பிலிருந்து ஏறத்தாழ 350 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின்யின் இரண்டாவது வருடத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த ஜெமீல், தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலேயே தனது கல்வியை ஆரம்பம் முதல் தொடர வேண்டுமென்பதற்காக இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முதலாம் வருட மாணவராக இணைந்து தனது கல்வியை முன்னெடுத்தார்.

மேலும் தென்கிழக்குப் பல்கலையின் முதல் உபவேந்தராக எம்.எல்.ஏ காதரை ஏற்றுக் கொள்ள வேண்டுமென எம்.எச்.எம் அஷ்ரஃப் விடுத்த கோரிக்கையை ஜெமீல் ஏற்றுக் கொண்டதனையடுத்து எம்.எல்.ஏ காதர் உபவேந்தராக நியமிக்கப்பட்டார்.

அத்துடன் இந்த பல்கலைக்கழகத்தை சர்வதேச ரீதியில் பிரபல்யபடுத்தும் வகையில் கொழும்பில் பல செயலமர்வுகளையும் பல்கலைக்கழகத்துக்கான விசேட கற்கை நெறிகளையும் ஏற்பாடு செய்திருந்தார். இதன் காரணமாக இந்த பல்பலைக்கழகம் தேசிய ரீதியாக அங்கீகாரம் பெற வித்திடப்பட்டது.

இவைகள் அனைத்துக்கும் பல்கலைக்கழக ஸ்தாபக உபவேந்தர், ஸ்தாபக பதிவாளர், அமைச்சர் அஷ்ரப் ஆகியோருக்கு ஜெமீல் உறுதுணையாகவும் பக்கபலமாகவும் செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25 ஆண்டுகள் நிறைவு! பேராசிரியர் எம்.ஐ.எம் கலீல்

ஏ.எல்.எம்.சலீம்