டெங்குவைக் கட்டுப்படுத்த ஐந்து மாத திட்டம்

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிபாரி பிரிவில் டெங்கு நோய்த்தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஐந்துமாத கால திட்டமொன்று செயற்படுத்தப்படவிருக்கின்றது.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஜீ.சுகுணனின் வழிகாட்டுதலுக்கமைவாக, நிந்தவூர்ப் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டமொன்றை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். திருமதி. பரூஸா நக்பர் வகுத்து செயல் வடிவமாக்கியுள்ளார்.

டெங்கு நோய் பூச்சியியல் ஆய்வுகளின்படியும், பருவ மழையினைத் தொடர்ந்தும் நிந்தவூர்ப் பிரதேசத்தில் டெங்கு நோய்த்தோற்று அபாய நிலை அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தலாமென அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே ஐந்து மாத கால டெங்கு ஒழிப்புத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய இம்மாதம் (ஐப்பசி) முதல் அடுத்த வருடம் (2022) மாசி மாதம் வரை நிந்தவூர்ப் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பரூஸா நக்பர் தெரிவித்தார்.

இதேவேளை, நுளம்பு பெருகக் கூடிய இடங்களை வீட்டின் சுற்றுப் புறச்சூழலிலும் மற்றும் அரச, தனியார் நிறுவனங்கள், மதஸ்தலங்களிலும் கண்டறிந்து அழித்தொழிக்க அனைவரையும் எம்முடன் ஒத்துழைக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களாக, நீண்ட நாட்களாக கொள்கலன்களில் தேங்கியுள்ள நீர், பாவனையிலில்லாத வாகன டயர்களில் தேங்கியுள்ள நீரை அகற்றுவதனாலும், கிணறுகள், நீர்த்தாங்கிகளை நுளம்பு வலை கொண்டு பாதுகாப்பதாலும், வீட்டின் உட்புறச் சூழலின் டெங்கு நுளம்பு பெருகக் கூடிய இடங்களான குளிர்சாதனப்பெட்டி, பூச்சாடிகள், சமையலறை குழாய் நீர் கசிவுகளை சுத்தம் செய்வதனாலும் நுளம்பின் பெருக்கத்தை வெகுவாகக் கட்டுப்படுத்தி அதனை இல்லாதொழிக்கலாம்.

இதன் மூலம் டெங்கு நோய் அபாயத்திலிருந்து பிரதேச மக்களைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியுள்ள அவர், கொவிட் தொற்று அபாயம் தொடர்ந்தும் காணப்படுவதால், கொவிட் தொற்று தடுப்பு சுகாதார வழிமுறைகளைத் தவறாது கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

டெங்குவைக் கட்டுப்படுத்த ஐந்து மாத திட்டம்

ஏ.எல்.எம்.சலீம்