
posted 23rd October 2021
இந்திய மீனவர்கள் கையாளும் முறையில் இலங்கை மன்னார் இழுவைப் படகு மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதை கவனத்தில் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து கடற்படையினர் மற்றும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து மன்னாரில் ஐந்து இலுவைப் படகுகள் மீனவர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது;
மன்னாரில் இழுவைப் படகு மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருவதினால் மன்னார் சிறு மீன்பிடியாளர்கள் தாங்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாக மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளின் கவனத்துக் கொண்டு வந்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளும் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து கடந்த வியாழக் கிழமை இரவு (21.10.2021) கடலில் மேற்கொண்ட திடீர் பரிசோதனையில் பள்ளிமுனை மற்றும் உப்புக்குளம் ஆகிய இடங்களைச் சார்ந்த ஐந்து இழுவைப் படகுகளில் சென்ற 15 மீனவர்கள் சட்ட விரோதமாக இரவில் தடைசெய்யப்பட்ட அட்டை பிடிக்கும் வலை மடியை பாவித்து இம் மீன்பிடியில் ஈடுபட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்தொழில் திணைக்களத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக எதிர்வரும் வெள்ளிக் கிழமை (29.10.2021) மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக மன்னார் கடற்தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஐந்து இழுவைப் படகுகளும் மன்னார் கோந்தப்பிட்டி கடற்படையினரின் கண்காணிப்பில் தற்பொழுது வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மன்னார் நடுக்குடா கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளைக் கொண்டு மீன்பிடியில் ஈடுபட்ட இரு படகுகள் கைது செய்யப்பட்டுள்ளன எனவும், இதில் பத்து மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக மன்னார் நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் திங்கள் கிழமை (25.10.2021) வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ