
posted 17th October 2021
காங்கேசன்துறையில் அடுத்தாண்டு 2022 பெப்ரவரியில் சிமெந்து தொழிற்சாலையை நிறுவும் பணி தொடங்கும் என்று இலங்கை சிமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் காமினி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையின் 725 ஏக்கர் நிலப்பரப்பை சுத்தம் செய்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்காக 185 ஏக்கர் பரப்பில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்றுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
எனினும், இராணுவத்தை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், 2022 ஆமண்டின் தொடக்கத்தில் காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை கட்டப்படும்போது அவர்கள் வெளியேறுவார்கள்.
இலங்கை சிமெந்து கூட்டுத்தாபனம், லங்கா சிமெந்து பி. எல். சி. ஆகிய இரண்டுக்கும் சொந்தமான இந்த வளாகங்கள் இராணுவத்தின் ஆதரவுடன் சுத்தப்படுத்தப்படுகின்றன. அங்கிருந்து சேதமடைந்த கட்டடங்களை அகற்றுகிறோம். நல்ல இயந்திரங்களை உபயோகப்படுத்தவும், பயன்படுத்த முடியாதவற்றை கேள்விகோரல் மூலம் விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிமெந்து தொழிற்சாலையைப் பொறுத்தவரை அதனை மீள ஆரம்பிக்க சர்வதேச முதலீட்டாளரை அழைக்கலாம். அல்லது உள்ளூர் முதலீட்டாளர்கள் இணைக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
1950களில் நிறுவப்பட்ட காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை நாட்டுக்கு குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டித் தந்தது. இந்த வருவாய் மூலம் இரு தொழிற்சாலைகளை அப்போதைய அரசாங்கத்தால் ஆரம்பிக்க முடிந்தது. எனினும் உள்நாட்டு போரை தொடர்ந்து தொழிற்சாலை வீழ்ச்சியை சந்தித்தது. 1990இல் தொழிற்சாலையை இராணுவம் ஆக்கிரமித்தது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த பல இயந்திரங்கள் திருடப்பட்டன அல்லது விற்கப்பட்டன என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.

எஸ் தில்லைநாதன்