
posted 22nd October 2021

வலயக் கல்விப் பணிப்பாளர் புவனேந்திரன்
கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக சுமார் ஒரு வருட காலம் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை கட்டம் கட்டமாக மீளவும் திறப்பதற்கு அரசு எடுத்துள்ள முடிவின் பிரகாரம் முதற்கட்டமாக இன்று பாடசாலைகள் திறக்கப்பட்டன.
முக்கிய அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சில அதிபர், ஆசிரியர் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குமாறு கோரி தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,
நாட்டிலுள்ள 200 இற்குக் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 3800 பாடசாலைகளை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இன்று திறப்பதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.
இதன் பிரகாரம் கல்முனை கல்வி வலயத்திலுள்ள 200 இற்குக் குறைவான மாணவர்களைக் கொண்ட 21 பாடசாலைகள் திறக்கப்பட்டன.
இவ்வாறு திறக்கப்பட்ட பாடசாலைகளுக்கு மாணவர் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டு, 38 வீதமான மாணவர்களே வருகை தந்திருந்ததாகக் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை இப்பாடசாலைகளுக்கு 67 வீதமான ஆசிரியர்கள் கடமைக்கு சமூகமளித்திருந்ததாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர் புவனேந்திரன் மேலும் தெரிவித்தார்.
தவிரவும் தொழிற்சங்கப் போராட்டத்திலீடுபட்டிருக்கும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று கடமைக்குத்திரும்பமாட்டோமெனவும்,
எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட் கிழமையே கடமைக்குத் திரும்புவோமென அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்