கல்முனையில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பினால் கல்வித்துறை வீழ்ச்சி - நீதிபதி ஸ்ரீநிதி கவலை

கல்முனைப் பிராந்தியத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதால் இங்கு கல்வித்துறை வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது என கவலை தெரிவித்துள்ள கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன், இதனை ஒழித்து, இளம் சமுதாயத்தினரை பாதுகாக்க சட்டத்தரணிகள் முன்னிற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் நீதிச் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதையிட்டு, அவரைப் பாராட்டி கௌரவிக்கும் பெரு விழா நேற்று சனிக்கிழமை (30) கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது ஏற்புரை நிகழ்த்துகையிலேயே அவர் இக்கருத்துக்களை குறிப்பிட்டார்.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஐ.எல்.எம்.ரமீஸ் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் மேலும் கூறியதாவது;

கல்முனை என்பது நாடு முழுவதும் மிகவும் பிரசித்த பெற்ற இடமாகும். நான் கல்முனைக்கு வர முன்னதாகவே இப்பிரதேசம் பற்றி அறிந்து வைத்திருந்தேன். குறிப்பாக நாட்டின் எப்பகுதியிலும் முஸ்லிம்கள் முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்துள்ளனர். தலைநகரில் எந்த அலுவலகத்திற்கு சென்றாலும் முஸ்லிம்கள் இருப்பார்கள். ஆனால் இன்று அந்த நிலைமை குறைந்து வருவதைக் காண முடிகிறது. கல்வியில் கல்முனைப் பிரதேசம் பின்னடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது.

இப்பிராந்தியத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதனாலேயே கல்வி வீழ்ச்சி கண்டு வருகிறது. மாணவர்களும் இளைஞர்களும் வழிகெட்டுச் சீரழிந்து செல்கின்ற அளவுக்கு ஒரு அபாயமிக்க சூழல் இங்கு காணப்படுகிறது. உங்கள் சமுதாயத்தை பாதுகாக்க வேண்டுமானால் இந்த நிலை அவசரமாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். குறிப்பாக சட்டத்தரணிகள் அனைவரும் முன்னின்று போதை ஒழிப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது பணிவாக வேண்டுகோளாகும்.

எனது சேவைக்காலத்தில் கல்முனைப் பிராந்தியத்தில் போதைபொருள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக விடயங்களைக் கட்டுப்படுத்துகின்ற விடயங்களில் நான் கரிசனையுடன் முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.

அவ்வாறே இப்பகுதியில் முஸ்லிம்களிடையான ஒற்றுமை குறைந்து வருவதையும் என்னால் அவதானிக்க முடிகிறது. நான் கல்முனைக்கு வர முன்னதாக எங்கு சென்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும் பிற சமூகத்தினர் மத்தியில், ஒற்றுமைக்கு உதாரணமாக முஸ்லிம் சமூகத்தையே முன்னுதாரணமாக காட்டுவேன். ஆனால் கல்முனைக்கு வந்து 03 வருடங்கள் கடமையாற்றியபோது நான் என் மனதில் இறுத்தி வைத்திருந்த எண்ணத்திற்கு மாற்றமாகவே இங்குள்ள நிலைமையைக் காண முடிந்தது. அது எனக்கு மிகவும் ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

உடன் பிறந்த சகோதரர்கள் மத்தியில் கூட ஒற்றுமையில்லாத காரணத்தினால் பல பிணக்குகள் நீதிமன்றுக்கு வந்துள்ளன. நான் இயன்ற வரை வழக்குகளை நீடிக்காமல் சமரசம் செய்து வைப்பதில் கரிசனை காட்டினேன்.
ஆகவே, முஸ்லிம்கள் தமக்கிடையிலான ஒற்றுமையை இறுகப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். சமூகப் பாதுகாப்பு என்பது ஒற்றுமையிலேயே தங்கியுள்ளதை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எந்த சந்தர்ப்பத்திலும் சமூக ஒற்றுமை சிதைவடைவதற்கு இடமளித்து விடாதீர்கள் என்பதே எனது அன்புக் கட்டளையாகும்.

அத்துடன் பல்லின மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் அனைத்து இனத்தவரிடையேயும் ஐக்கியம் பேணுவது முக்கியமாகும். இந்த நிகழ்வைப் பாருங்கள். முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்ற இப்பிரதேசத்தில் முஸ்லிம் சட்டத்தரணிகளாகிய நீங்கள் தமிழச்சியாகிய எனக்கு விழா எடுக்கிறீர்கள் என்றால் எம்மிடையே எந்த பேதமும் இல்லை என்பதைத்தானே இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. அப்படியென்றால் இனங்களிடையே மனக்கசப்புகளை ஏற்படுத்துகின்ற விடயங்களில் நாம் விழிப்பாக இருந்து, அத்தகைய சக்திகளை முறியடித்து, இன ஐக்கியத்துக்கே முன்னுரிமையளிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கல்முனையில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பினால் கல்வித்துறை வீழ்ச்சி - நீதிபதி ஸ்ரீநிதி கவலை

ஏ.எல்.எம்.சலீம்