
posted 26th October 2021
நிந்தவூர் கலை, இலக்கிய பேரவையின் ஒன்று கூடல் நிகழ்வு நீண்ட இடை வெளிக்குப் பின் இடம் பெற்றுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக கடந்த சுமார் எட்டு மாத காலமாக பேரவையின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.
தற்சமயம் கொவிட் - 19 வைரஸ் பரவல் வெகுவாகத்தணிந்துள்ளதால் இக்கலை இலக்கியப் பேரவையின் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக பேரவையின் ஒன்று கூடல் நிகழ்வு பேரவையின் தலைவர் டாக்டர். ஏ.எம்.ஜாபிர் தலைமையில், நடைபெற்றது.
நிந்தவூர் அரசடித் தோட்டம் ஜாபிர் மஹாலில் இடம்பெற்ற இந்த ஒன்று கூடலில், எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய கலை, இலக்கிய வளர்ச்சிக்கான செயற்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து முடிவுகள் எடுக்கப்பட்டன.
பேரவையின் செயலாளரும் பொறியியலாளருமான எம்.ஐ.இஸ்மாயிலின் ஆலோசனைக்கமைய “பாவேந்தல்” பால்முனை பாறுக்கின் பொன்விழாவிற்கு ஆதரவு வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது.
அத்துடன் கொவிட்-19 வைரஸ் பரவல் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்த கருப்பொருளை கொண்ட பேச்சுப் போட்டி ஒன்றை பாடசாலை மாணவர்களிடையே நடத்துவதெனவும் முடிவுசெய்யப்பட்டது.
ஓய்வு நிலை அதிபர் கவிஞர் எஸ்.அகமது, மக்கீன் ஹாஜி, புதுநகரான் அஷ்ரப் ஆகியோர் தாம் வடித்த புதிய கவிதைகளையும் ஒன்று கூடலில் அரங்கேற்றினர்.
நிந்தவூரின் கலை, இலக்கிய வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையிலான பல தீர்மானங்களும் ஒன்று கூடலின் போது எடுக்கப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம்