எழுமாறான பரிசோதனைகள்
எழுமாறான பரிசோதனைகள்

டாக்டர். ஜீ.சுகுணன்

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கொவிட் - 19 வைரஸ் பரவல் பாதிப்பு கணிசமான அளவு வெகுவாகக் குறைந்துள்ளன.

இப்பிராந்தியத்தில் கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் திட்டம் வெற்றிகரமாக இடம் பெற்றுள்ள நிலையில் மேற்படி முன்னேற்றகர நிலமை உருவாகியுள்ளது.

இருப்பினும் நாடு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டப்பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இதற்கான சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதில் மக்கள் அசமந்தமாகச் செயற்படக்கூடாதெனப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஜீ.சுகுணன் வலியுறுத்தியுள்ளார்.

எனினும் கொவிட் பரவல் தணிந்துள்ள போதிலும், தமது பிரிவிலுள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் எழுமாறான சமூக ரீதியினாலான அன்டிஜன் மற்றும் பி.சீ.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்குமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கு அமைவாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை குறித்த எழுமாறான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். யூ.எல்.எம்.நியாஸின் வழிகாட்டுதலுக்கமைய பிரதேச பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் இதற்கமைய எழுமாறான அன்டிஜன். பி.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

சாய்ந்தமருது பிரதான வீதியில் பொதுச் சந்தைக்கு அருகே பொது மக்கள் இப்பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபொதிலும் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்பட்டோரிடையே கொவிட் தொற்றாளர்களெவரும் கண்டறியப்படவில்லையெனத் தெரியவருகின்றது.

இதேவேளை நாடுபூராகவும் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் 15 முதல் 19 வயது வரையான பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசிகள் அனைத்து வைத்தியசாலைகளிலும், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் ஏற்றும் நடவடிக்கைக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

முதல் கட்டமாக 19 வயதுடையோருக்கு திங்கட் கிழமையும், அதனைத் தொடர்ந்து 18 வயதினருக்கும், பின்னர் 17 வயதினருக்கும், தொடர்ந்து 16, 15 வயதினருக்கும் தடுப்பூசி வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எழுமாறான பரிசோதனைகள்

ஏ.எல்.எம்.சலீம்