உலக அஞ்சல் தினம்

உலக அஞ்சல் தினம் இலங்கையில் எதிர்வரும் 9 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவிருக்கின்றது.

இதன்படி உலக அஞ்சல் தினத்தையொட்டி தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்திலான நிகழ்வுகள் எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவிருக்கின்றன.

இந்த 147 ஆவது உலக அஞ்சல் தினத்தையொட்டிய பிரதான தேசிய நிகழ்வு அன்றைய தினம் கொழும்பு அஞ்சல் திணைக்களதலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்தினவின் வழிகாட்டுதலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த தேசிய நிகழ்வில், அமைச்சர் டளஸ் அழகப்பெரும பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.

கொவிட் - 19 சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய இடம் பெறவிருக்கும் இந்த அஞ்சல் தின பிரதான நிகழ்வில் பங்குபற்றுநர்களாக 75 பேர் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளதுடன், zoom தொழில் நுட்பத்தினூடாகவும், முகநூல் நேரடி நிகழ்வாகவும் பிரதான நிகழ்வு இடம்பெறவுள்ளது.

மேலும் தொழிற்சங்கங்கள் சார்பாக தலா ஒரு பிரதி நிதியே நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளதாகவும், இத்தேசிய நிழ்வின் விசேட அம்சமாக கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் இரத்ததான முகாம் ஒன்றும் நடைபெறவுள்ளதாகவும், அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர் சங்க பொதுச் செயலாளர் யூ.எல்.எம்.பைஸர் தெரிவித்தார்.

இதேவேளை மாகாண, மாவட்ட மட்டங்களில் பிரதி அஞ்சல் மாஅதிபர்கள் மற்றும் பிரதேச அஞ்சல் அத்தியட்சகர்கள் தலைமையிலும் உலக அஞ்சல் தின நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன.

தவிரவும், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நிந்தவூர் பிரதம தபாலகத்தில் உலக அஞ்சல் தினத்தையொட்டி மர நடுகை நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது.

நிந்தவூர் பிரதம தபால் அதிபர் யூ.எல்.எம்.பைஸர் தலைமையில் இந்த மர நடுகை நிழ்வு நடைபெறும்.

அஞ்சல் மாஅதிபரின் அறிவுறுத்தலுக்கமைய இம்முறை அஞ்சல் தினத்தில் மரநடுகைத் திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உலக அஞ்சல் தினம்

ஏ.எல்.எம்.சலீம்