
posted 18th October 2021
இழுவைப் படகுகளை தடை செய்யும் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக் கோரியும் முல்லைத்தீவு முதல் பருத்தித்துறை வரையில் கடல் வழியாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தை, தமிழகம் உட்பட இந்தியாவுக்கு எதிரானதாக திசை திருப்பி விடுவதற்கு திரைமறைவில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சுப் பதவியை பொறுப்பேற்ற பின்னர் இழுவைப்படகுகளின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் அவற்றை தடை செய்யும் சட்டத்தை விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் அமுலாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உறுதிப்படுத்தக் கோரியுமே கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு - பருத்தித்துறை படகுகள் பேரணியை தொடர்ந்து பருத்தித்துறையில் அவர் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2014ஆம் ஆண்டு இழுவைப்படகு தொழிலை தடை செய்யும் தனிநபர் சட்டமூலத்தை நான் கொண்டுவந்திருந்தேன். அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு இழுவைப்படகுகள் எமது கடல்வளங்களை முற்றாக அழிக்கின்றன என்பது சுட்டிக்காட்டப்பட்டது.
இந்திய அரசங்கத்தின் அமைச்சரவை மட்டத்திலான பேச்சுக்களின்போது நானும் பங்கேற்று அந்த விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டன. அதன் பின்னர் 2017ஆம் ஆண்டு 11ஆம் இலக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் இழுவைப்படகு தொழிலை முற்றாக கட்டுப்படுத்தும் சூழல் இருந்தது.
அதன் பின்னரான சூழலில் இழுவைப்படகு பாவனைகள் வெகுவாக குறைந்திருந்தன. ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் இழுவைப் படகுகளின் பாவனைகள் அதிகரித்துள்ளன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சராக உள்ளார். அவரால் இந்த விடயத்தில் கரிசனை கொண்டு கட்டுப்பாடுகளைச் செய்ய முடிந்திருக்கவில்லை. சட்டத்தை அமுலாக்க முடிந்திருக்கவில்லை.
இதனால் வடக்கு கடல்வளம் அழிவடைகின்றது என்பதற்கு அப்பால் கடற்றொழிலாளர்களின் வலைகள் அறுக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகின்ற நிலைமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாகவே, நாம் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளோம். தற்போது யாழ்.மாவட்டத்திற்குள் மட்டும் ஐந்நூறு வரையிலான இழுவைப்படகுகள் பயன்படுத்தப்படுகின்றன என்று தகவல்கள் உள்ளன.
இவ்வாறான படகுகளை பயன்படுத்துவதற்கு அனுமதி அளித்தது யார்? அதற்காக அவர்களுக்கு கிடைக்கும் பிரதிய உபகாரங்கள் என்ன? போன்ற பல கேள்விகள் இருக்கின்றன. இந்த விடங்கள் தொடர்பில் நாம் கவனத்தில் கொள்கின்றபோது, எமது கடற்றொழிலாளர்களின் எதிர்காலத்திற்காக முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்தினை இந்தியாவுக்கும், தழிழதக்திற்கும் எதிரானதாக காண்பிப்பதற்கு திரை மறைவில் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எமது கடற்றொழிலாளர்களின் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படுதோடு, கடல் வளமும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.அதுவரையில் போராட்டங்கள் தொடரும் - என்றார்.

எஸ் தில்லைநாதன்