
posted 31st October 2021
சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழரின் தாயகக் கோட்பாட்டை உடைத்து இன விகிதாசாரத்தை மாற்றி அமைப்பதில் மிகவும் மூர்க்கத்தனமாக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் அதற்கான வியூகங்களை ஐனாதிபதி கோட்டாபய தலைமையிலான குழு தீவிரப்படுத்தியுள்ளது. ஆகவே உடனடியாக ஒன்றிணைந்து தடுப்பதற்கான பொறிமுறை ஒன்றை செயற்படுத்த வேண்டும் இதன் மூலமே இருப்பை தக்க வைக்க முடியும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
சுதந்திர இலங்கைக்கு பின்னர் வந்த பிரதமர் டி எஸ் சேனநாயக்க தொடக்கம் ஐனாதிபதி கோட்டாபய வரை விரிவடைந்து பெரும் பூதமாக மாறி விட்டது தமிழரின் வடக்கு கிழக்கு மாகாண நிலங்களை பறித்து சிங்கள குடியேற்றங்களை உருவாக்கும் திட்டம்.
ஆரம்பங்களில் கல்லோயாத் திட்டம், அல்லை கந்தளாய் திட்டம் என பெயர் சூட்டி அரங்கேறிய சிங்கள குடியேற்றங்கள் இன்று சத்தம் இன்றி மிகத் தீவிரமாக ஊடுருவி விட்டன. போரின் போது தீவிரப்படுத்த முடியாது போன குடியேற்றங்கள் யுத்த மௌனத்தின் பின்னர் தீவிரமடைந்துள்ளது.
தற்போதைய நில அபகரிப்பு தொல்லியல் வனவள கரையோரப் பாதுகாப்புத் திணைக்களங்கள் மூலமாகவும் எல்லை நிர்ணயம் என்ற போர்வையிலும் முன்னெடுக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை திருகோணமலை மாவட்டங்கள் எப்படி இன விகிதாசார முறையில் மாற்றியமைக்கப்பட்டதோ அதனை ஒத்த நிலைக்கு மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் நில அபகரிப்புக்களும் சிங்கள குடியேற்றங்களும் தற்போது தீவிரமடைந்துள்ளது.
வடக்கு கிழக்கு நிலத் தொடர்ச்சியின் எல்லையில் குறிப்பாக திருகோணமலையின் குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் உள்ள நிலப்பரப்பை சிங்கள குடியேற்றங்களுக்கு உள்ளாக்கி தமிழர் தாயகத்தின் நிலத் தொடர்பின் நிர்வாக கட்டமைப்பை உடைத்துள்ளனர். இவ்வாறு தொடரும் நில அபகரிப்பு தற்போது வவுனியா மாவட்ட இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க அனுராதபுரம் வடக்கு எல்லைக் கிராமங்களை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் எல்லை நிர்ணயத்தை மாற்றி இணைக்கும் செயற்பாடு வரை அரங்கேறி உள்ளது.
தமிழர் தரப்பு தொடர்ந்து வீதியில் போராடுவதும், கடிதங்களை எழுதுவதும் இதனை முடிவுக்கு கொண்டு வரும் என நினைத்தால் இன்னும் சிறிது காலத்தில் தாயகக் கோட்பாடு முழுவதும் பறிக்கப்பட்டு விடும். உடனடியாக ஒன்றிணைந்து தடுப்பதற்கான பொறிமுறை ஒன்றை செயற்படுத்த வேண்டும். இதன் மூலமே இருப்பை தக்க வைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ