
posted 5th October 2021
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைமீன்பிடி படகு குருநகர் பகுதி மீன்பிடிப் படகை நேராக மோதி சேதப்படுத்தியது. அத்துடன் படகில் இருந்த குருநகர் மீனவர்களை கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் இந்திய மீனவர்கள் ஈடுபட்டனர் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குருநகர் பகுதியில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக ஒரு படகில் மூவர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் தொழிலுக்குச் சென்ற நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் கற்கடதீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீன்பிடி ட்ரோலர் குருநகர் மீனவர்களின் மீன்பிடிப் படகை நேராக மோதி சேதப்படுத்தியது. அத்துடன் படகில் இருந்த மூவரையும் தாக்கிக் கடலில் தூக்கிப்போடும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர். குறித்த படகு முழுமையாக சேதம் அடைந்துள்ளதோடு படகில் பயணித்தவர்கள் காயங்களோடு கரை சேர்ந்துள்ளனர்.
எமது கடலில் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. குறிப்பாக அத்துமீறிய இந்திய மீனவர்கள் எமது படகைச் சேதப்படுத்தியதோடு மாத்திரமல்லாது படகில் இருந்த மீனவர்களின் உயிரைக் காப்பாற்றாது கடலுக்குள் தள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தபோதிலும் குருநகர் மீனவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பி கரை சேர்ந்துள்ளனர் என குருநகர் மீனவர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்