
posted 6th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
“கிழக்கில் சிவந்த சுவடுகள்” நூல் வெளியீட்டு விழா
“தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வே வேண்டும். இந்த இலக்கிலேயே தமிழரசுக்கட்சி பயணிக்கின்ற நிலையில் இதற்கான புதிய வேலைத்திட்டங்களையும் நாம் ஆரம்பிக்க வேண்டும்”
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட, இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கூறினார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற மூத்த ஊடகவியலாளரும், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவருமான இரா. துரைரெத்தினத்தின் “கிழக்கில் சிவந்த சுவடுகள்” நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான செல்லையா பேரின்பராசா தலைமையில், மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ. நிக்ஸன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டதுடன், நூலின் அறிமுக உரையை முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அ. சுகுமாரும், நூல் நயவுரையை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கி. துரைராஜசிங்கமும் நிகழ்ந்த்தினர்.
நூலின் முதல் பிரதியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரிய நேத்திரன், நூலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“பலர் பேசவும், எடுத்துக்காட்டவும் மறுக்கும் பல விடயங்களைத் தாங்கியதாகவும், காலத்தின் கட்டாய ஆவணமாகவும் வெளிவந்துள்ள கிழக்கில் சிவந்த சுவடுகள் நூலை வெளியிட்டுள்ள மூத்த ஊடகவியலாளர் இரா. துரைரெத்தினத்தின் முயற்சி அளப்பரியதாகும்.
தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளைப் பலரும் பேசுவார்கள். ஆனால் பொறுப்புக்கூறல் விடயத்தில் தெற்கில் முரண்பட்ட நிலைகாணப்படினும் இதற்கு இந்த நூல் மூலம் ஊடகர் துரைரெத்தினம் பதில் தந்துள்ளார்.
சமகால அரசியலில் தமிழரசுக் கட்சி அரசியல் ரீதியாகப் பல தீர்வுகளுக்கான முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில், அரசியல் தீர்வும், பெறுப்புக் கூறலும் முக்கிய விடயங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன.
சமஷ்டி அடிப்படையிலான தீர்வை நோக்கிய செயற்பாடுகளைத் தமிழரசுக்கட்சி முன்னெடுத்து வருகின்றது.
இந்த வகையில் நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கிய பாதையில் தமிழரசுக் கட்சி பயணித்து வரும் நிலையில் நமது மக்களும் விழிப்புடன் செயற்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அடாவடித்தனம்புரியும் அம்பிட்டிய தேரரின் செயற்பாடுகள் தொடர்பில் மௌனம் காப்போர், காணொளிகளைப் பதிவு செய்யும் ஜனநாயக உரிமை பெற்ற ஊடகவியலாளர்களை விசாரணைக்கு அழைக்கும் நிலமையே உள்ளது.
ஊடகங்களை அடக்க முயற்சிக்கும் இத்தகைய செயற்பாடுகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. கண்டிக்கத்தக்க செயற்பாடுகளே இவையாகும். மக்களைக் காட்டிக்கொடுப்பவர்களுக்கு எத்தகைய விசாரணைகளும் இல்லாத நிலமையே இங்குள்ளது.
மயிலத்தமடு பண்ணையாளர்களின் போராட்டம் எந்த தீர்வுமின்றி 50 நாட்களையும் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நாங்கள் மட்டும் தான் தட்டிக்கேட்கும் நிலையும் உள்ளது.
இந்த நிலையில் காகம் ஒரு வடையைத் திருடிச் சென்றாலும், சாணக்கியன்தான் திருடிச் சென்றார் எனப் பறைசாற்றும் நிலமை இந்த மாவட்ட இன வெறியர்களால் ஏற்படுத்தப்படுகின்றது” என்றார்.
நூலாசிரியர் துரைரெத்தினம் நிகழ்வின் போது, மட்டக்களப்பு ஊடகமையம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன சார்பாக பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)