
posted 8th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வேலை நிறுத்தப் போராட்டம் அம்பாறையில் வெற்றிகரம்
நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி முன்னெடுத்துவரும் 48 மணிநேர வேலை நிறுத்தப் போராட்டம் அம்பாறை மாவட்டத்திலும் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தபாலகங்களும் உப தபாலகங்களும் இழுத்து மூடப்பட்டுள்ளன.
நுவரெலிய தபால் நிலையத்தை சுற்றுலா விடுதிக்காக சுவிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதேபோன்று கண்டி பழமைவாய்ந்த தபாலகத்தையும் கைமாற்ற எடுக்கப்படும் முயற்சிக்கும் எதிர்ப்புத் தெரிவித்து இன்று (08) புதன் கிழமையும், நாளை (09) வியாழக்கிழமையுமாக மேற்படி வேலை 48 மணிநேர நிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது.
இந்தப் போராட்டத்தில் தபால் அதிபர்கள், உப தபால் அதிபர்கள் மற்றும் கடை நிலை ஊழியர்கள் வரை அனைத்து தபால் ஊழியர்களும் பங்குகொண்டுள்ளனர்.
அரச வளங்களை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த வேலை நிறுத்தப்போராட்ட நடவடிக்கை அம்பாறை மாவட்டத்திலும் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது. அக்கறைப்பற்று அஞ்சல் அத்தியட்சகர் பிரிவில் உள்ள 13 பிரதம தபாலகங்களும் (ஒன்றைத்தவிர) 53 உபதபாலகங்களும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக இரு தினங்களும் மூடப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத் தலைவர் யூ.எல்.எம். பைஸர் தெரிவித்தார்.
தபாலகங்கள் இழுத்து மூடப்பட்டு வேலை நிறுத்தம் காரணமாக மூடப்பட்டுள்ளதாக அறிவித்தல்களும் தபாலகங்களின் முன்னால் காணப்படுகின்றன. இதன் காரணமாக இந்த இரு நாட்களும் தபால் சேவைகள் முற்றாக முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இப்பிரிவில் இயங்கிவரும் சம்மாந்துறை தபாலக தபாலதிபர் ஏ. யூசுப் லெப்பையிடம் இத்தொழிற்சங்க போராட்டத்தில் கலந்து கொள்ளாமை குறித்து வினவிய போது தமக்கு இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பில் எத்தகைய கடிதம் மூலமான அறிவித்தல்களும் தனக்கு கிடைக்கவில்லை எனவும், வழமைபோன்று ஊழியர்கள் வேலைக்கு சமூகமளித்ததால் தபாலகத்தை திறந்து மக்களுக்கான சேவையினை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
தவிரவும் சுமார் 200 வருடங்களாக நுவரெலியா தபால் நிலையத்தில் தபால் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றை புனரமைத்து தொடர்ந்து செயற்படுவதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திவருவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
மேலும் நாளை (09) வியாழக்கிழமை நுவரெலியாவில் பிரதேச பொது மக்களுடன் இணைந்து நண்பகல் 12 மணிக்கு நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக தபால் ஊழியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)