
posted 19th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஜக்கியம் இல்லையேல் எதுவுமிருக்காது - வட - கிழக்கு சிவில் சமூகம் எடுத்துரைப்பு!
அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி, வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில், தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்குகொண்டிருந்தனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர், மாறுபட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு சந்திப்பில் பங்குகொண்ட சந்தர்ப்பமாக அமைந்திருந்தது.
பேராசிரியர் பொன். பாலசுந்தரம் பிள்ளையின் தலைமையில் இடம்பெற்ற, மேற்படி கூட்டத்தில், அரசியல் ஆய்வாளர்கள் யதீந்திரா, நிலாந்தன், தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் தனபாலசிங்கம் ஆகியோர் உரையாற்றிருந்தனர். தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் செய்ய வேண்டியது என்ன? என்னும் கேள்வி கேட்கக் கூடிய சூழல் இருக்கின்றதென்றால், கடந்த பதின்நான்கு வருடங்களில் எதையும் நம்மால் அடைய முடியவில்லை என்பதுதான் அடிப்படையான விடயமாகும். இந்த பின்புலத்திலிருந்துதான் தமிழ் கட்சிகளை நோக்கி ஒற்றுமைப்படுங்கள் என்னும் கோரிக்கையை நாம் முன்வைக்க வேண்டியிருக்கின்றது. யுத்தம் முடிவுற்ற போது, தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது பல கட்சிகள் இருக்கின்றன. இந்த விடங்களை அரசியல் ஆய்வாளர் யதீந்திரா சுட்டிக்காட்டியிருந்தார்.
தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் ஓரணியாக வேண்டியது காலத்தின் கட்டாயம். ஜக்கியம் இல்லையேல் எதுவும் இருக்காது, இவ்வாறு அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் குறிப்பிட்டார். தமிழ் கட்சிகளின் ஜக்கியம் தேசத்தை கட்டியயெழுப்புவதாக அமைய வேண்டும் மாறாக, வெறும் தேர்தல் இலக்கை அடிப்படையாகக் கொண்டதாக அமையக் கூடாது. தேர்தல் இந்த இலக்கின் ஒரு பகுதியாக அமைந்திருக்க வேண்டும்.
தமிழ் கட்சிகள் அனைத்துக்கும் கடந்தகால அனுபவங்கள் உண்டு, கட்சிகளுக்கு மட்டுமல்ல, புத்திஜீவிகள் - ஏன் பொது மக்களுக்கும் அனுபவமுண்டு. ஆனால் கடந்த கால அனுபங்களிலிருந்து, எவருமே எதையும் கற்றுக்கொள்ளவில்லை. நிலைமைகள் பெரியளவில் மாறிவிட்டன. முன்னர் அரியலை நோக்கியது போன்று இப்போது பார்க்க முடியாது. இவ்வாறு தனபாலசிங்கம் குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கு சிவில் சமூகம் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தனியான கலந்துரையாடல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)