
posted 16th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
உலக நீரிழிவு தின நிகழ்வுகள்
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையும், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த உலக நீரிழிவு தின விழிப்புணர்வு நடைபவனியும் கருத்தரங்கும் நிந்தவூரில் இடம் பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வைத்தியர் ஐ எல் எம் றிபாஸின் வழிகாட்டலுக்கமைய , நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம் பி அப்துல் வாஜித் தலைமையில் இடம்பெற்றது.
"நீரிழிவுக்கான பராமரிப்பை அணுகுவோம்" எனும் தொனிப் பொருளில் நிந்தவூர் பெரிய ஜும்மா பள்ளிவாசல் முன்றலில் இருந்து ஆரம்பமான இந்த நடைபவனி வைத்தியசாலை வரை இடம்பெற்றதுடன் தொடர்ந்தும் விழிப்புணர்வு கருத்தரங்கும் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ எம் எச் சுமைய்யா கலந்து கொண்டு விரிவுரையாற்றினார்.
இந் நிகழ்வை கூட்டாக ஒழுங்கு படுத்திய நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய மேற்பார்வையாளர்கள், தாதியர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், மற்றும் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வைத்திய அதிகாரி , பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்
மேலும் இந்த நிகழ்வில் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அறபு கல்லூரி மாணவர்கள் , வைத்தியசாலைக்கு வந்திருந்த பயனாளிகள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது உரையாற்றிய வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம் பி அப்துல் வாஜித் வைத்தியசாலை நிர்வாகமும் சுகாதார துறையும் பொதுமக்களும் ஒன்றிணைந்து இவ்வாறான நிகழ்வுகளை வழிநடாத்தியது மிகவும் உற்சாகமளிப்பதாகவும், இதன் மூலம் சுகாதாரம் சார்ந்த பல விடயங்களை சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்தலாம் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வின் ஆயுர் வேத வைத்தியசாலையினால் இலைக்கஞ்சியும் பரிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)