இலங்கை - இந்திய உடன்படிக்கை முழுமையாக அமுலாக வேண்டும்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இலங்கை - இந்திய உடன்படிக்கை முழுமையாக அமுலாக வேண்டும்

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் பாதுகாப்பு தொடர்பாக இந்தியா அக்கறை கொள்ள வேண்டும். அத்துடன், 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியா முழு அக்கறையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வடக்கு, கிழக்கு அரசியல், இந்து மத, சிவில் மற்றும் புலம்பெயர் சமூக அமைப்புகள் இந்தியாவில் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய தலைநகர் புதுடில்லியில் அமைந்துள்ள 'பிரஸ் கிளப் ஒவ் இந்தியா'வில் நேற்று (29) புதன்கிழமை செய்தியாளர்கள் மற்றும் சமூக, சமய அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்தபோதே வடக்கு, கிழக்கு பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் புதுடில்லியில் தங்கியுள்ள விக்னேஸ்வரன் எம். பி. ஈழநாடு நாளிதழுக்கு தகவல் தருகையில் தெரிவித்த முக்கிய அம்சங்கள் வருமாறு,

இலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களும் அவர்கள் வாழும் பகுதிகளும் சீனா சார்பு நிலையில் செயற்பட்டு வருகின்றார்கள். ஆனால், வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இந்தியாவின் தென் பகுதிக்கு அருகாமையில் உள்ளன. அத்தோடு கலாசாரம், சமயம், மொழி உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் இந்தியாவுடன் மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளது.

அந்தவகையில், வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பான்மையானவர்கள் எங்களது கடவுள் இந்தியா - எம்மை ஆதரவாக பார்த்துக்கொள்ளும் என்ற நிலைப்பாட்டில் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அதுமட்டுமன்றி இந்த நம்பிக்கையானது எமது பாதுகாப்பையும் இந்தியாவின் தென்பிராந்திய தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்வதாக உள்ளது. அதனடிப்படையில் இந்த விடயம் பூகோள ரீதியாக முக்கியமானதாகும்.

இரண்டாவதாக, சிங்கள பௌத்த திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களுக்கு நாம் நேரடியான சாட்சியாளர்களாக இருக்கின்றோம். பிரித்தானிய காலனித்துவம் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவில் சிறுபான்மை மக்கள் பாகுபாட்டுக்கு உட்படுத்தப்படக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு இருக்கதக்கதாக முதலில் இந்திய தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து அவர்களை நாடு கடத்தினார்கள். அதன் பின்னர் சிங்களம் மட்டும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக இனக்கலவரங்கள் அரங்கேற்றப்பட்டு தமிழ் மக்கள் நாட்டிலிருந்து வெளியேறும் நிலைக்கு வலிந்து தள்ளப்பட்டார்கள். இதனால் தற்போது பல இலட்சம் தமிழ் மக்கள் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் நிலைமை உருவாகியுள்ளது.

தொடர்ந்து எமது இளைஞர்கள், யுவதிகள் பல்கலைக்கழகங்களில் உள்நுழைவதை கட்டுப்படுத்தும் வகையில் தரப்படுத்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அத்தோடு இலங்கை அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான செயற்பாடுகள் தொடர்ந்ததன் காரணமாக இளைஞர்கள் ஆயுதங்களை கையிலெடுத்தார்கள். விடுதலை இயக்கங்கள் தோற்றம் பெற்றன. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட ஆயுத ரீதியான போராட்டம் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்றிருந்தது.

ஆயுதப் போராட்டம் நிறைவுக்கு வந்ததன் பின்னரும், தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளுதல் பௌத்த மதம் சார் நிர்மாணங்களை மேற்கொள்ளுதல் என்று திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களை அரசாங்கம் கொள்கை ரீதியாக முன்னெடுத்து வருகின்றது. இந்து மதத் தலங்கள் பௌத்த தலங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன. இந்து தலங்கள் அழிக்கப்பட்டு பௌத்த தலங்களாக மாற்றப்படுகின்றன.

அரசாங்கம் தொடர்ச்சியாக தமிழர்களை ஒதுக்கும் செயல்பாட்டை பல்வேறு வழிகளில் முன்னெடுத்து வருகின்றது.

இலங்கை இராணுவத்தில் மூன்றில் இரு பங்கினர் வடக்கு - கிழக்கில் நிலை கொண்டுள்ளனர். எமது பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. படைகள், புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களால் தமிழ் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தமிழர்கள் தமது பூர்வீக நிலங்களில் பாதுகாக்கப்படுவதும் அவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டுமாக இருந்தால் அதற்கான வகிபாகத்தை இந்தியாவாலேயே மேற்கொள்ள முடியும். இவ்விதமான நிலைமைகள் மூன்று தசாப்தத்துக்கு முன்னதாகவே காணப்பட்டமையை உணர்ந்த காரணத்தால்தான் இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

அந்த ஒப்பந்தம் தற்போது வரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. வடக்கு - கிழக்கு தமிழர்கள் தற்போது பாதுகாப்பற்ற நிலைமையை உணர்ந்துள்ளார்கள். அவர்களின் விடயங்களில் கரிசனைகளை கொள்வதற்கு சரியானதொரு நிறுவனக் கட்டமைப்பு காணப்படவில்லை. ஆகவே இந்திய - இலங்கை ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இதேநேரம் 13ஆவது திருத்தச்சட்டம் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களுக்கான நிரந்தரமான தீர்வாக அமையாது விட்டாலும் தமிழர்களின் கையில் சிறுஅதிகாரத்தை அளிக்கும் வகையிலான மாகாண சபைக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. ஆனால், கடந்த ஐந்து வருடங்களாக மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவில்லை.

தொடர்ச்சியாக மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாமையால் தமிழர்களுக்கான நிர்வாகக் கட்டமைப்பொன்று காணப்படாதுள்ள நிலையில் தற்காலிக ஏற்பாடாக இடைகால நிர்வாக சபையொன்றை நிறுவவும் இந்தியாவின் வகிபாகம் முக்கியமானதாகின்றது.

அதுமட்டுமின்றி இந்தியா இலங்கையுடன் 1987ஆம் ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம், இந்தியா தனது தென்பிராந்தியத்தின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு வடக்கு - கிழக்கு தமிழர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும் என்றார்.

இந்த சந்திப்பில், தழிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன் எம். கே. சிவாஜிலிங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளான துரைசாமி தவசிலிங்கம், வேலன் சுவமிகள், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் தலைவர் கிருஷ்ணபிள்ளை இளங்கோ, அமெரிக்க தமிழர் ஐக்கிய அரசியல் செயல்குழுவின் செயலாளர் கலாநிதி தமோதரம்பிள்ளை சிவராஜ், ஐக்கிய அமெரிக்காவின் தமிழ் செயல்குழுவின் செயலாளர் சுந்தர் குப்புசுவாமி, உலக சமூக சேவை மையத்தின் அறங்காவலர் ஆர். சி. கதிரவன் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை - இந்திய உடன்படிக்கை முழுமையாக அமுலாக வேண்டும்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)