
posted 7th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
6 மாணவர்கள் விடுதலை
மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல் தரைப் போராட்டத்தில் பங்கேற்ற பின்னர், வீடு திரும்பிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சந்திவெளிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாணவர்கள் அறுவரும் நேற்று முன் (05) தினம் மாலை, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். சட்ட விரோதமாக ஒன்றுகூடியமை, பெருந்தெருக்கள் சட்டத்தின் கீழ் சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் மாணவர்கள் மீது பொலிஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. வழக்கை ஆராய்ந்த நீதிபதி மாணவர்களை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார். பிணையெடுப்பவர்கள் தமது வதிவிடத்தை கிராமசேவகர் ஊடாக உறுதிப்படுத்த வேண்டும் என கோரப்பட்ட நிலையில், வதிவிடத்தை உறுதிப்படுத்த நேற்று முன் தினம் எழுந்த தாமதம் காரணமாக மாணவர்கள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, பிணையாளிகளின் விதிட உறுதிப்படுத்தல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். பிணையில் விடுவிக்கப்பட்ட மாணவர்கள், சித்தாண்டியில் கால்நடைப் பண்ணையாளர்கள் 53ஆவது நாளாக போராடிவரும் இடத்திற்கு சென்றனர். போராட்டக்களத்தில் இருந்த தாய்மார், மாணவர்களை கண்ணீர் மல்க வரவேற்று, உணவு உபசரிப்புக்களையும் வழங்கினர். மாணவர்கள் மீது சந்தி வெளிப் பொலிஸாரால் தொடுக்கப்பட்ட வழக்கானது எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)