
posted 27th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தொடர்ச்சியான கைது நடவடிக்கையே இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களை தொடர்ச்சியாக கைது செய்வதன் மூலம் வருகையை கட்டுப்படுத்த முடியும் என்று யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் புனிதப் பிரகாஷ் தெரிவித்தார்.
நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்திய அத்துமீறிய மீன்பிடியை கட்டுப்படுத்துமாறு பல வருடங்களாக கோரிக்கை முன்வைத்தும் எவ்வித பயனும் எமது மீனவர்களுக்கு கிடைக்கவில்லை.
அண்மையில்கூட யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மீனவர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து கவனவீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து இரு நாட்டு தலைவர்களுக்கும் கோரிக்கை கடிதத்தையும் கையளித்தோம்.
எமது பிரச்னை தொடர்பில் இரு நாட்டு தலைவர்களிடம் இருந்து சாதகமான பதில் இதுவரை கிடைக்கவில்லை. எமது கடற்பரப்பினுள் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை கடற்படை கைது செய்யும் நிலையில் கைதுகள் போதாது என மீனவர்கள் ஆகிய நாங்கள் கருதுகிறோம்.
கைதுகள் குறைக்கப்படுமாயின் மீனவர்களின் அத்துமீறிய வருகை அதிகரிக்கும். இதனால், எமது மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்படும் சூழ்நிலை அதிகரிக்கும்.
ஆகவே, இலங்கை கடற்படை இந்திய அத்துமீறிய மீன்பிடியை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ச்சியான கைது நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)