
posted 2nd November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தேரரின் அடாவடித்தனங்களைப் புட்டுபுட்டு வைக்கும் துரைரெத்தினம்
மட்டக்களப்பு பௌத்த மதகுரு அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் மன்னிப்பு கோரியுள்ளமை குறித்து கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் (ஈ.பி.ஆர்.எல்.எப்) இரா. துரைரெத்தினம் கருத்து வெளியிட்டுள்ளார்
அதில் அவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
இவரைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பு நகரிலுள்ள பௌத்த விகாரையின் குருவாக இருந்து பல நீண்ட காலமாக செயற்பட்டு வருகின்றார்.
இவருடைய கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் சமூகம் தொடர்பாக பல முரண்பாடான, தமிழ்சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு துறவிக்கான குணாம்சம் மற்றும் புனிதத்தன்மை இல்லாத அநாகரீகமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர்
குறிப்பாக, ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பங்குடாவெளி பிரதான வீதியில் அமைந்துள்ள தொல் பொருளுக்கான இடத்தில் 20.09.2020 அன்று பௌத்த மதகுருவால் தொல்பொருள் திணைக்களத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கும், செங்கலடி பிரதேச செயலகத்தைச் சேர்ந்த காணி உத்தியோகத்தர்களுக்கும் பலமான முறையில் தாக்குதலை நடாத்தி, பணயக் கைதியாக சிறைபிடித்து, வன்முறையை பிரயோகித்து, மிகவும் அசிங்கமான முறையில் துன்பங்களுக்குள்ளாக்கி, அவமானப்படுத்தி உத்தியோகத்தர்கள் மீது நடந்து கொண்ட முறைகளும், அது போன்று போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வேத்துச்சேனை கிராமத்திலும் அது போன்று மண்முனைதென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் 15.11.2021 அன்று பௌத்த மதகுருவினால் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடந்து கொண்ட முறை, மட்டக்களப்பு கச்சேரி, மயிலம்பாவெளி பிரதானவீதி, பங்குடாவெளி போன்ற இடங்களில் இந்த பௌத்த மதகுரு அதிகாரிகளுக்கெதிராக வன்முறையை பிரயோகித்து மிகவும் அசிங்கமான முறையில் சட்டத்திற்கு விரோதமாக நடந்து கொண்ட முறைகளும், அதேபோன்று மட்டக்களப்பு நகரில் ஜனாதிபதி நிகழ்ச்சி நடாத்தும் இடத்திலிருந்து அருகிலேயே சிங்கள மதகுரு உட்பட சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தும் போது ஜனாதிபதியின் படத்திற்கு தும்புத்தடிகளாலும், ஈர்க்குவார்வக்கட்டுகளாலும் படத்தின் மீது அவமானப்படுத்தும் செயல்களும், இன்னும் கண்ணுக்குத் தெரியாத செயற்பாடுகளும் உண்டு.
இறுதியாக கடந்த வாரம் மிகவும் சிறப்பான முறையில் செற்பட்டு வருகின்ற மட்டக்களப்பு மாநகரசபை தொடர்பாக ஆணையாளர், உத்தியோகத்தர்கள், வேலையாட்கள் குறிப்பாக பல கிருமிகள் தொற்றக் கூடிய வேலைகளைக் கூட தனது உயிர் பாதுகாப்புக் கூட பார்க்காமல் வேலைப் பழுக்களை சுமந்து நிற்கின்ற மாநகரசபை ஊழியர்களுக்கு எதிராகவும் மிகவும் தவறான ஒரு பொய்யான புறளியைக் கிளப்பி எமது சமூகத்திற்காக நல்லமுறையில் செயலாற்றுகின்ற மாநகரசபையை இழிவு படுத்தி பேசியதை மக்கள் அந்த வினாடியே மதகுருவின் கூற்றை நிராகரித்து விட்டனர்.
சமூகத்திற்கு மத்தியிலும் வேண்டத்தகாத சொற் பிரயோகங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தும், ஒரு சில நிமிடங்களுக்குள் மாநகரசபை தொடர்பாகவும், தமிழ்சமூகம் தொடர்பாகவும், கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பாகவும், அவர் தொடர்பாக எம் ஒவ்வொருவருக்கும் உள்ள வடுக்களை போக்க முடியுமா?
இவரை நாங்கள் மன்னிப்பதற்கு யார்? இவ்விடயங்கள் நீதித்துறைக்கு சென்றுள்ளதால் சட்டம் தனது கடமைகளைச் செய்யும் வரையும் ஆவலுடன் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்க வேண்டியது எமது பொறுப்பும் கடமையுமாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)