
posted 13th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சர்ச்சைக்கு நிரந்தர தீர்வு
இறக்காமத்திற்கான தனியான பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதில் இருந்து மிக நீண்ட காலமாக இருந்து வந்த இறக்காமத்தின் கிழக்குப் புற எல்லை தொடர்பான சர்ச்சைக்கு மிக சுமூகமான தீர்வு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம அவர்களின் தலைமையில் எடுக்கப்பட்டுள்ளது.
இறக்காமம் எல்லை தொடர்பாக 2009.05.29 ஆம் திகதி, இல: 1603/50 இறுதியாக வெளியான அரச வர்த்தமானி மூலம் குறித்துக் காட்டப்பட்டுள்ள எல்லைகளே இறக்காமத்தின் ஆட்புல நிர்வாக எல்லைகள் எனவும் அதற்குட்பட்ட நிருவாக நடவடிக்கைகள் இறக்காமம் பிரதேச செயலகத்தினாலும், பிரதேச சபையினாலும் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்க்கமான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் இறக்காமம் பிரதேச செயலாளர், பிரதேச சபை பிரதிநிதிகள், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், பிரதேச சபை, நில அளவையியல் மேற்பார்வையாளர், அரச உயர் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டு இவ்விடயம் ஆராயப்பட்டு தீர்க்கமான முடிவு அரசாங்க அதிபரினால் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எல்லைப் பிரச்சினை 2009 ஆண்டு முதல் தீர்க்கப்படாமல் அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் மழுங்கடிக்கப்பட்டு வந்தது மட்டுமல்லாமல், குறித்த பிரச்சினை திரிவுபடுத்தப்பட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தப் படாமல் இரு பிரதேச மக்களுக்கிடையில் வெறுப்புணர்வையும், குரோதத்தையும் குறித்த தரப்பினர் வளர்த்துவந்தது கவலைக்குரிய விடயமாகும். இருப்பினும் அரசாங்க அதிபரின் இந்த நடவடிக்கை மூலம் புரையோடிப் போயிருந்த நீண்ட காலப் பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வாக இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)