
posted 28th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கனவுகளை சுமந்த மக்களுக்காக எமது மண்ணில் நிரந்தர ஒளியையும் ஏற்றவேண்டும்
கல்லறைகளுக்கு மட்டும் ஒளியேற்றாமல் கனவுகளை சுமந்த மக்களுக்காக எமது மண்ணில் நிரந்தர ஒளியையும் ஏற்றவேண்டும் – ஈ.பி.டி.பி அழைப்பு
(எஸ் தில்லைநாதன்)
வருடாவருடம் கல்லறைகளுக்கு மட்டும் ஒளியேற்றிக் கொண்டிருக்காமல் கனவுகளை சுமந்த மக்களுக்காகவும் எமது மண்ணில் நிரந்தர ஒளியை ஏற்ற வேண்டும். அதற்காகவே நாம் முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (28.11.2023) நடைபெற்ற கூடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;
உரிமைப் போராட்டத்திலும் அழிவு யுத்தத்திலும் உயிர் நீத்த அனைத்து இயக்கங்களின் போராளிகளுக்கும் மக்களுக்கும் நாம் செலுத்தும் அஞ்சலி என்பது அவர்கள் என்னென்ன கனவுகளை எண்ணி உயிர் நீத்தார்களோ அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் ஒன்றாக எண்ணி ஒளியேற்ற வேண்டும்.
அதுமாத்திரமல்லாது குறித்த காலப்பகதியில் உயிர் நீத்த மக்களின் கனவுகளையும் மாறா வடுக்களையும் இன்றும் சுமந்தவாறு வாழ்ந்துகொண்டிருக்கும் உறவுகளின் வாழ்வும் சிறப்பானதாக அமைவதற்கு ஏற்றவகையில் நிரந்தர ஒளி ஏற்றப்பட வேண்டும்.
நாட்டை அச்சுறுத்திவந்த அழிவு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சுமார் 12 ஆயிரத்து ஐநூற்று 22க்கு மேற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெற்று பொதுவாழ்வில் ஈடுபட்டவருகின்றனர். அவர்களது விடுதலையில் நாம் கணிசமான பங்காற்றியுள்ளளோம்.
ஆனாலும், அவர்களது வாழ்வாதாரம் எந்த நிலையில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோன்று உரிமைப் போராட்டத்தில் இணைந்து போராடிய அனைத்து இயக்க போராளிகளின் வாழ்வியலும் ஏதோ ஒரு வகையில் பின்னடைவாகவே இருந்துவருகின்றது.
அவ்வாறு வாழ்வாதாரத்தில் பின்தங்கியுள்ள அனைத்து இயக்க போராளிகளுக்கும் அவர்களின் வாழ்வாதாரம் பொருளாதார ரீதியில் சிறப்பானதாக உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக விசேட நிதி ஒதுக்கீட்டை ஜனாதிபதியிடம் கோரவுள்ளோம்.
குறிப்பாக யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு விஷேட நிதி ஒதுக்கீடு உள்ளது போல அழிவு யுத்தத்தில் உயிர் நீத்த அல்லது நிரந்தர பாதிப்புகளை சந்தித்துள்ள அனைத்து இயக்க போராளிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யுமாறே ஜனாதிபதியிடம் கோரவுள்ளோம்.
இதேவேளை 1995 சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கையின் பின்னர் இராணுவ பிரசன்னத்துக்கு மத்தியிலும் பயங்கரவாத தடைச்சட்டம் அவசரகாலச் சட்டம் என்பன நடைமுறையில் இருந்த சமயம் எமது மக்கள் தமது நியாயங்களுக்காக போராட்டங்களை நடத்த முடியும் என்ற சூழலை உருவாக்கியது நாம் தான்.
அவ்வாறு ஒரு நிலைமையை நாம் அன்று உருவாக்கியதன் வெளிப்பாடே இன்று இத்தகைய நிகழ்வுகளுக்கு களமமைத்துக் கொடுத்துள்ளது. மக்கள் மென்போக்குடன் போராடி தமது உரிமையை நிலை நாட்டுவதை நாம் வரவேற்கின்றோம்.
அதேவேளை எமது இனத்தின் உரிமைக்கான யுத்தத்தில் உயிர் நீத்த அனைத்து இயக்க போராளிகளினதும் நினைவாக பொதுத் தினம் ஒன்றை அங்கிகரிக்குமாறு தலைவர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஊடாக அங்கிகாரத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
கடந்த நல்லாட்சி என்ற அரசின் ஆட்சியின் போது நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்து பெரும் விவாதத்தின் பின்னர் நாடாளுமன்றம் அதற்கு அங்கீகாரமும் வழங்கியுள்ளது.
ஆனாலும் பின்னர் ஏற்பட்ட கொரோனா தாக்கங்கள் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் ஆட்சி மாற்றங்கள் காரணமாக அந்த பிரேரணை நடைமுறைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எனவே யுத்தத்தில் இறந்த அனைத்து இயக்க போராளிகள் பொதுமக்களை நினைவு கூரும் பொதுத் தினத்தை செயற்படுத்த சமூகத்திலுள்ள புத்திஜீவிகள், சமூக அக்கறையாளர்கள் சமயத் தலைவர்கள் என அனைவரும்பங்காற்ற வேண்டும்.
அதனூடாக கல்லறைகளுக்கு மட்டும் தொடர்ச்சியாக ஒளியேற்றிக் கொண்டிருக்காமல் கனவுகளை சுமந்த மக்களுக்காகவும் எமது மண்ணில் நிரந்தர ஒளியையும் ஏற்ற அனைவரும் முன்வரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
உண்மைத்தன்மை இருக்குமாயின் அதனை நாம் வரவேற்போம் – ஈ.பி.டி.பியின் உடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு
(எஸ் தில்லைநாதன்)
புலிகள் அமைப்பின் தலைவரின் மகள் துவாரகாவின் பெயரால் வெளியாகியுள்ள உரையில் உண்மைத்தன்மை இருக்குமாக இருந்தால் அதனை நாம் வரவேற்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (28.11.2023) நடைபெற்ற கூடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;
புலிகள் இயக்கத்தின் முத்த உறுப்பினர்கள் தளபதிகளாக இருந்தவர்கள் மற்றும் இராணுவ தரப்பு உயரதிகாரிகள் புலிகளின் தலைவர் உட்பட அக்குடும்பத்தினர் அனைவரும் யுத்தத்தில் உயிர் நீத்துவிட்டார்கள் என்பதை மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள்.
ஆயினும் துவாரகாவின் பெயரால் ஓர் அணியினர் துவாரகா உயிருடன் இருப்பதாகவும் அவர் பேசிய உரை என தெரிவித்து ஓர் உரையை வெளியிட்டுள்ளனர்.
அந்த உரையில் சர்வதேசம் தீர்வை வைத்தால் பரீசீலிப்போம் எனவும் அரசியல் போராட்டங்கள் ஊடாகவே தீர்வை பெறமுடியும் என்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
அதனடிப்படையில் அந்த செய்தியில் உண்மைத் தன்மை இருக்குமென்றால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அதனை வருவேற்கின்றது.
ஏனெனில் நாம் இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னர் அரசியல் ரீதியாகவே எமது மக்களுக்கான அரசியல் உரிமைக்கு தீர்வுக்கு அரசியல் ரீதியாகவே முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.
அதேபோன்றே துவாரகாவின் பெயரால் இந்த உரையை வெளியிட்ட குழுவினர் அந்த மென்மையான சொல் வடிவத்தையே வெளியிட்டுள்ளனர்.
இத்தகைய மென்போக்கு தன்மையுடைய நிலைப்பாட்டை குறித்த தரப்பினர் முன்கூட்டியே எடுத்திருப்பார்களாக இருந்தால் இவ்வாறான பேரழிவு ஏற்பட்டிருப்பதை தவிர்த்திருக்க முடியும் என்பதுடன் துவாரகாவின் பெயரால் நிதி சேகரிப்பு மற்றும் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்று வருவதையும் தடுத்திருக்க முடியும். எனவே இது தொடர்பாக புலம்பெயர் சமூகம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)