
posted 10th November 2022
அகில இலங்கை பாசடாலைகளுக்கிடையிலான தமிழ்மொழி தினப் போட்டியின் கதம்ப நிகழ்ச்சியில் (முஸ்லிம் நிகழ்ச்சி) நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசியப் பாடசாலை மாணவர்கள் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
அதேவேளை பிரிவு – 4 சிறுகதை ஆக்கம் போட்டியில் தேசிய ரீதியில் 4 ஆவது இடத்தை இப்பாடசாலை மாணவன் எம்.எச். முஹம்மட் அஸ்கி பெற்றும் பெருமை சேர்த்துள்ளார்.
மேற்படி வரலாற்று சாதனை படைத்து பாடசாலைக்கும் வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ள சம்பந்தப்பட்ட மாணவர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று பாடசாலை அதிபர் ஏ. அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது குறித்த மாணவர்களின் சாதனைக்கு உந்து சக்தியாக மிளிர்ந்த ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்களுக்கும் கௌரவம் அளிக்கப்பட்டது.
இந்த வரலாற்று நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமான போது, கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர், எம்.எஸ். சஹதுல் நஜீம், பிரதேச செயலாளர், ஏ.எம். அப்துல் லத்தீப், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான யூ.எல்.எம். சாஜித், எம்.ஏ. றசீன் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு வரவேற்றனர்.
பின்னர் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிபர் முஸ்தபா தலைமையில் பிரதான வீதி மற்றும் உள்ளுர் வீதிகளுடாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன்போது வழிநெடுகிலும் திரண்ட பொதுமக்கள் வெடி கொளுத்தியும், பெண்கள் குரவை இசைத்தும் மாணவர்களுக்கு பெருவரவேற்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சபையினரும் இணைந்திருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)