
posted 14th November 2022
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் இளைஞர்களிடையே தமிழ்த் தேசிய சிந்தனையை இல்லாமல் செய்வதை இலக்காக கொண்டு சில தீய சக்திகள் எமது தமிழ் இளைஞர்களை போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாக்கும் வகையில் மிகவும் சூட்சுமமான முறையில் செயற்படுவதை உணர முடிகின்றது. இந் நிலையில் இத்தகைய பேரபாயத்திலிருந்து எமது சமூகத்தைப் பாதுகாக்க அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்...
இந் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆந் திகதி மௌனித்த பின்னர் வடக்கு கிழக்கில் போதைவஸ்து பாவனை மட்டுமன்றி மதுபான பாவனையும் கணிசமான அளவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவர்களும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதை காணமுடிகின்றது. இதன் காரணமாக பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கநிலை வெகுவாக குறைவடைந்து செல்கின்றது. இதன் தொடராக குற்றச் செயல்கள் அதிகரித்த வண்ணமுள்ளன. நாம் என்றுமே கண்டிராத தீய செயல்கள் அரங்கேறுகின்றன. இதனையிட்டு அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் விழிப்புடன் செயற்படுவதுடன் எமது மாணவர்களின் நடத்தை கோலங்களை தினமும் கண்காணிக்க வேண்டும்.
அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்து காணப்படும் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் வகையில் இம் மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசித்திருப்பதை அறிய முடிந்தது. இவ்வாறு வடக்கு கிழக்கில் உள்ள ஏனைய மாவட்ட அரசாங்க அதிபர்களும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
மேலும் போதைப் பொருள் வியாபாரத்தி ஈடுபடும் நபர்கள் மற்றும் இவர்களின் செயற்பாடுகளுக்கு துணை போகின்றவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி உச்சபட்ச தண்டனைகளை வழங்க வேண்டும்.
இல்லையேல் இந் நாடு எதிர்காலத்தில் பாரிய விளைவுகளைச் சந்தித்து சீரழிந்த தேசமாக மாறுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)