யாழ். மாவட்டத்தில் அடை மழை

யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று திங்கள் பல மணி நேரமாக இடைவிடாது தொடர்ச்சியாக கடும் மழை பெய்தது.

கடந்த ஞாயிறு காலை 9 மணி முதல் நேற்று முன் தினம் அதிகாலை வரை யாழில் அடை மழை நீடித்தது. இதன்பின் நேற்று முற்பகல் 10 மணி முதல் தொடர் மழை பெய்த நிலையில் மழை ஆரம்பித்து சுமார் 2 மணித்தியாலங்களிலேயே வலிகாமத்தின் பெரும்பாலான விவசாய நிலங்கள் வெள்ளக்காடாக மாறின.

அத்துடன் யாழ். மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகளிலும் வீதிகளிலும் அதிக வெள்ள நீர் தேங்கி நிற்பதைக் காண முடிந்தது.

யாழில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக மூன்று குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பருவப் பெயர்ச்சி மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ். மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்துவருகின்றது.

இந்த அடைமழை காரணமாக வீட்டினுள் வெள்ளம் புகுந்ததனால் யாழ்ப்பாணம் – காக்கைதீவு பகுதியில் வசித்துவரும் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் காக்கைதீவு மீனவர் சங்க கட்டடத்தினுள் தங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.

யாழ். மாவட்டத்தில் அடை மழை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)