
posted 1st December 2022

ஏ.எல். அப்துல் மஜீத்
இலங்கையின் முஸ்லிம் கட்சியான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாகப் பிரகடனம் செய்யப்பட்டு 29.11.2022 டன் 36 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது.
இலங்கை முஸ்லிம் மக்களுக்கென தனித்துவமான அரசியல் கட்சி ஒன்று இல்லாதிருந்த நீண்டகாலப் பெரும் தாகத்தை தணிக்க உருவான முஸ்லிம் காங்கிரஸை கட்சியின் நிறுவுனர் மறைந்த மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி கொழும்பு, தெமடகொட பாஷாவிலாவில் அரசியல் கட்சியாகப் பிரகடனம் செய்து வைத்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாகப் பிரகடனப்படுத்தப்பட்டு 36 வருடங்கள் நிறைவு பெறுவதையொட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிப் பிரகடனம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், உயர்பீட சிரேஷ்ட உறுப்பினருமான “முழக்கம்” ஏ.எல். அப்துல் மஜீத் கருத்து வெளியிடுகையில் பின்வருமாறு கூறினார்நந
“சுதந்திர இலங்கையில் சுமார் 40 வருடகாலமாக முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சி ஒன்று இல்லாத நிலமை நீடித்து வந்தது.
முஸ்லிம் கட்சி ஒன்றின் அவசியம் உணரப்பட்டு வந்த போதிலும் அந்த வரலாற்றுக்கடமையைச் செய்து முடிக்க அப்போது எந்தவொரு முஸ்லிம் தலைமையும் முன்வரவில்லை.
எனினும் 1976 ஆம் ஆண்டு புத்தளம் பள்ளிவாசல் படுகொலை முஸ்லிம் அரசியல் கட்சி ஒன்றின் அவசியத்தை கூர்மையடையச் செய்திருந்தது.
அப்போது இளம் சட்டத்தரணியாக விருந்த மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் 1980 செப்டம்பர் 21 ஆம் திகதி காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் ஸ்தாபனத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
அதிலிருந்து ஐந்து வுருடங்கள் ஒரு தேசிய இயக்கமாக செயற்பட்டு வந்த முஸ்லிம் காங்கிரஸ் 1986 நவரம்பர் 29 ஆம் திகதி அரசியல் கட்சியாக தலைவர் மர்ஹூம் அஷ்ரபினால் பிரகடனம் செய்து வைக்கப்பட்டது.
இன்று ஆலவிருட்சமாக வியாபித்து மர்ஹூம் அஷ்ரப் வழியே முஸ்லிம் சமூகத்திற்கு அளப்பரிய சேவைகளை ஆற்றிவருகின்றது” எனக்கூறினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)