
posted 28th November 2022
இலங்கையிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களது எண்ணிக்கையைக் குறைப்பதை நோக்காகக் கொண்டு நியமிக்கப்பட்டுள்ள தேசிய எல்லை நிர்ணயக் குழுவிற்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிஸ் கட்சி சார்பில் பரிந்துரைகள் முன் வைக்கப்படவுள்ளன.
உள்ளுராட்சி மன்றங்களது உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4000 ஆக குறைப்பதை நோக்காகக் கொண்ட மேற்படி எல்லை நிர்ணயக் குழுவிற்கு எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதிக்குள் பரிந்துரைகளை முன் வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய முஸ்லிம் காங்கிரஸ் கட்சிசார்பில் முன்வைக்கப்படவிருக்கும் பரிந்துரைகள் தொடர்பான கருத்தறியும் கட்சி சார்ந்த ஆலோசனைக் கூட்டமொன்று ஓட்டமாவடி, காவத்த முனை மண்டபத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமனற் உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்ந்த தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி உயர் பீட உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது தமது உள்ளுராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பிலான ஆலோசனைகளையும், முன்மொழிவுகளையும் பலரும் முன்வைத்து கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
இக்கருத்தாய்வுகளின் அடிப்படையில் சாதக, பாதகங்கள் தொடர்பான பரிந்துரைகளை எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முதல் முஸ்லிம் காங்கிரஸ் எல்லை நிர்ணயக் குழுவிற்கு முன்வைக்கவுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)