
posted 23rd November 2022
நிந்தவூர் பிரதேச செயலகத்தில் மத்தியஸ்த சபைக்கு பொது மக்கள் பிணக்குகளை ஆற்றுப்படுத்துவதற்கென முறைப்பாட்டுப்பெட்டி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், பொது மக்களின் சிரமங்களைத் தவிர்க்கும் நோக்குடனும், மத்தியஸ்த சபைகளுக்கு பொது மக்கள் தமது பிணக்குகளை ஆற்றுபடுத்துவதை இலகுவாக்கும் வகையிலும் பிரதேச செயலகங்கள் தோறும் முறைப்பாட்டுப் பெட்டிகள் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன.
இதனபடிப்படையில் நிந்தவூர் பிரதேச செயலகத்தில், நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கான முறைப்பாட்டுப் பெட்டியை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் ஸ்தாபித்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. பாத்திமா சாமிலாவின் ஏற்பாட்டில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
மேலும், அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் தோறும் மத்தியஸ்த சபைகளுக்கான பிணக்குகளை ஆற்றுப்படுத்தும் முறைப்பாட்டுப் பெட்டிகள் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் பொது மக்கள் தங்களது பிணக்குகள் குறித்த மனுக்களை தத்தமது பிரதேச செயலகங்ளில் வைக்கப்பட்டுள்ள மத்தியஸ்த சபைகளுக்கான முறைப்பாட்டுப்பெட்டிகளில் இடுவதன் மூலம் இணக்கப்பாட்டிற்கான கலந்துரையாடலை முன்னெடுக்க வசதி அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பரவலாக பிரதேச செயலக மட்டத்தில் முன்னூறுக்கு மேற்பட்ட மத்தியஸ்த சபைகள் ஆணைக் குழுவினால் ஸ்தாபிக்கப்பட்டு அதன் நோக்கில் வெற்றிகரமாக இயங்கி வருவது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)