
posted 22nd November 2022
மன்னார் நகர பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சில இடங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அவற்றில் மன்னார் நகரம் எருக்கலம்பிட்டி பட்டித்தோட்டம் ஜோசப் வாஸ் நகர் போன்ற இடங்களில் இவை அடையாளம் காணப்பட்டுள்ள மக்கள் எச்சரிக்கையுன் செயல்பட வேண்டும் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் செவ்வாய் கிழமை (22.11.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி. வினோதன் மேலும் கருத்து தெரிவிக்கும் போது
மன்னார் நகர பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சில இடங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது அவற்றில் மன்னார் நகரம் எருக்கலம்பிட்டி பட்டித்தோட்டம் ஜோசப் வாஸ் நகர் போன்ற இடங்களில் இவை அடையாளம் காணப்பட்டுள்ளது
கடந்த ஜனவரி மாதம் 118 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் இந்த நவம்பர் மாதம் 33 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் இவற்றில் அதிகமானவர்கள் மன்னார் நகரம் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் பகுதிகளில் வசிப்பவர்களாக காணப்படுகின்றார்கள்
இந்த வருடம் மொத்தமாக 236 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதும் மரணங்கள் எதுவும் நிகழவில்லை எவ்வாறானும் பல நோயாளர்கள் குருதி கசிவு நிலையுடன் மன்னார் பொது வைத்திய சாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பெரும் சிரமத்தின் மத்தியில் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்
ஆகவே பொதுமக்கள் தமது வீடு மற்றும் சுற்றாடல்களில் டெங்கு நோய்கள் பெருகக்கூடிய இடங்களை கண்டறிந்து சுத்தம் செய்ய வேண்டும் அல்லது அகற்ற வேண்டும் அல்லது முற்றாக அழிக்க வேண்டும்
குறிப்பாக நீரை சேமித்து வைக்கக்கூடிய சிறிய தொட்டில்கள் பாத்திரங்கள் வீட்டின் உள்ளே காணப்படக்கூடிய நீர் தேக்கி வைக்க கூடிய சிறி பாத்திரங்கள் பூச்சாடிகள் போன்றவற்றில் இந்த டெங்கு நுளம்புகள் முட்டையிட்டு அதிலிருந்து குடம்பி கூட்டுப் புழுக்கள் உருவாகி அவை டெங்கு நுளம்பாக மாற்றம் பெறுகிறது ஆகவே பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்பாக இருக்க வேண்டும்
ஏனைய மாவட்டங்கள் போல் அல்லாது மன்னர் மாவட்டத்தில் கூடுதலாக நீர் தேக்கி வைக்கப்படும் கட்டமைப்பு நிலைகள் காணப்படுகிறது குறிப்பாக சிறிய நீர் பாத்திரங்களிலேயே இந்த டெங்கு நுளம்புகள் அதிகமாக உருவாகிறது
முன்னைய காலங்களில் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது கட்டப்பட்ட நீர் தொட்டிகள் தற்போது பாவிக்கப்படாமல் இருக்கின்றது அதன் மூலமாகவும் அதிக நுளம்புகள் பெருக்கம் ஏற்படுகின்றது
ஜோசப் வாஸ் நகரை பொறுத்தவரையில் பெருமளவான மக்கள் பருவ கால தொழிலை மேற்கொள்வதற்காக தமது வீடுகளைப் பூட்டி விடதல் தீவு பகுதிக்கு சென்றுள்ளார்கள் இதனால் நுளம்பு பெருகக்கூடிய இடங்களை கண்டறிவதில் சுகாதார அதிகாரிகளுக்கு சிரமமாக இருக்கிறது
எனவே அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வீடுகளுக்கு சென்று சுகாதாரத்துறையினரால் ஏற்பாடு செய்திருக்கின்ற நுளம்புகளை கண்டறியும் செயற்பாடுகளுக்கு உதவி புரியுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
அத்தோடு காய்ச்சல் தலையிடி இருமல் உடம்பு வலி போன்ற நோயாளர்கள் வீடுகளில் சுய பரிசோதனைகளை மேற்கொண்டு தாமதமாகாமல் உடனடியாக அரசை வைத்தியசாலைக்கு வந்து பரிசோதனை செய்து டெங்கு நோய் தாக்கத்திலிருந்து உங்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டு கொள்கின்றோம்
தற்போது பல நோயாளர்கள் குருதி கசிவு நிலை வந்தவுடன் தான் வைத்தியசாலைக்கு வருகிறார்கள் அதை தவிர்த்து காய்ச்சல் தலையிடி உடல் நோவு சளி போன்ற நோய்கள் இருப்பவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு வந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)