மன்னாரில் மாவீரர்களாக விதைக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி

மன்னார் மாவட்டத்தில் மாவீரர்கள் துயிலும் இரண்டு இடங்களிலும் மற்றும் மாவீரராக மரணித்த தங்கள் உறவினர்களுக்கும் தங்கள் இல்லங்களிலும் மக்கள் தீபம் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செய்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேசத்திலுள்ள பெரியபண்டிவிரிச்சான் மற்றும் மாந்தை மேற்கு பிரதேசத்தில் ஆட்காட்டிவெளி ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (27.11.2022) மாலை மாவீரர் துயிலும் இல்லங்களில் பெருந்தொகையான மக்கள் ஒன்று கூடி தங்கள் பிள்ளைகள், உறவினர்களை நினைவு கூர்ந்து, உறவினர்களின் நிழல் படங்களை வைத்து மலர்கள் தூவி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்திய நிகழ்வுகள் இடம்பெற்றன.

பெரியபண்டிவிரிச்சான் மாவீரர்கள் துயிலும் இல்லத்தில் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவம் அன்று மாலை 6.05 மணியளவில் மாவீரரின் தாயார் ஒருவர் பிரதான தீபத்தை ஏற்றிவைக்க இதைத் தொடர்ந்து அங்கு குழுமியிருந்த உறவினர்கள் தங்கள் உறவினர்களின் நினைவாக தீபங்களை ஏற்றினர்.

இந் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர சபை உப தவிசாளர் சூ.செ. யான்சன் , நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் பரஞ்சோதி உட்பட மதத் தலைவர்கள் , தமிழரசு கட்சியை சார்ந்த அதிகமான உறுப்பினர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அத்துடன் மாவீரர்கள் துயிலும் இல்லங்களுக்கு செல்ல முடியாதவர்கள் தங்கள் வீடுகளில் மாவீரர்களாக விதைக்கப்பட்ட உறவினர்களின் நிழல் படங்களை வைத்து அஞ்சலி செய்த நிகழ்வுகளும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாவீரர் துயிலும் இல்லத்துக்கு வருகை தந்தவர்களுக்கு விதைக்கப்பட்ட தங்கள் உறவினர்கள் ஞாபகர்த்தமாக நடுவதற்கு தென்னங் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மன்னாரில் மாவீரர்களாக விதைக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)