மத்தியஸ்த சபை ஒன்றுகூடல்

நிந்தவூர் மத்தியஸ்த சபையின் ஏழு வருட நிறைவையொட்டிய ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று, நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நடைபெற்றது.
மத்தியஸ்த்த சபையின் தலைவர் பல்கீஸ் அப்துல் மஜீத் தலைமையில், அட்டப்பள்ளம் அன்ஸார் மாஸ்டர் தோட்டவளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் இலங்கை மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.எம். ஆஸாத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகள், கருத்துரைகள் இடம்பெற்றதுடன், நிந்தவூர் மத்தியஸ்த சபையின் கடந்த ஏழு வருட கால முன்மாதிரியான சிறந்த செயற்பாடுகளுக்கு தலைமைத்துவம் வழங்கி சபையை வழிநடத்தி,
பொது மக்களின் நல்லபிமானத்தை வென்ற சபையாக மிளிரச் சிறந்த தலைமைத்துவ பண்பாடுகள், வழிநடத்தல்கள் கொண்ட சபைத் தவிசாளர் பல்கீஸ் அப்துல் மஜீத் சபை உறுப்பினர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

பிரதம அதிதியும் மத்தியஸ்த பயிற்றுவிப்பாளருமான எம்.ஐ.எம். ஆஸாத் நிகழ்வில் உரையாற்றுகையில், முன்னுதாராணமாக ஒரு பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட நிந்தவூர் மத்தியஸ்த சபை எவ்வித பிரச்சினைகளுமின்றி சுமுகமாக இயங்கி கடந்த ஏழு வருடகாலமாக சிறந்த மத்தியஸ்த சேவையாற்றியுள்ளதாக பாராட்டினார்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பதவிக்காலம் வறிதாக்கப்பட்டு நேர்முகப் பரீட்சைகள் முடிவடைந்துள்ள சபைகளின் தெரிவு செய்யப்பட்டோருக்கான மத்தியஸ்த பயிற்சிகள் எதிர்வரும் ஆண்டின் காலாண்டுக்குள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

மத்தியஸ்த சபை ஒன்றுகூடல்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)