பிரிவுபசார நிகழ்வும், வரவேற்பும்

அஞ்சல் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய முன்னாள் பிரதி அஞ்சல் மாஅதிபர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வத்திற்கு பிரிவுபசாரமளிக்கும் நிகழ்வுடன், புதிய பிரதி அஞ்சல் மாஅதிபர் காமினி விமலசூரியவை வரவேற்கும் நிகழ்வு ஒன்றும் நிந்தவூரில் நடைபெறவிருக்கின்றது.

அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவின் அஞ்சல் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் ஒருங்கிணைந்த மேற்படி நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அலுவலக பிரதம இலிகிதரும், அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத் தலைவருமான யூ.எல்.எம். பைஸர் தலைமையில், எதிர்வரும் 13 ஆம் திகதி (ஞாயிறு) நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய கோட்போர் கூடத்தில் நிகழ்வு நடைபெறும்.

நிகழ்வில் முன்னாள் பிரதி அஞ்ல் மாஅதிபர் ஜெயானந்தி திருச்செல்வம் பிரதம அதிதியாகவும், புதிய பிரதி அஞ்சல் மாஅதிபர் காமினி விமல சூரிய விசேட அதிதியாகவும் கலந்து கொள்வர்.

அத்துடன் சிறப்பு அதிதிகளாக கிழக்குப் பிராந்திய சிரேஷ்ட நிருவாகச் செயலாளர் திருமதி. வினோதினி கார்த்திகேசு, பிராந்திய நிருவாக உத்தியோகத்தர் செந்தில் குமார், பிராந்திய கணக்காளர் எஸ். பூபாகரன், அக்கரைப்பற்று - அமபாறை பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் எஸ்.ஆர்.கே ஜாகொட, மாகாண உதவி அத்தியட்சகர் (நுண்ணாய்வு) திருமதி. கே. அருள் செல்வன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிரதேசத்திலுள்ள பிரதம அஞ்சல் அதிபர்கள், உட்பட அஞ்சல் அதிபர்கள், உபஅஞ்சல் அதிபர்கள், பணியாளர்கள் நிகழ்வின் ஆரம்பத்தில் அதிதிகளை வரவேற்று அழைத்துச் செல்வதுடன், கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக நிகழ்வு ஏற்பாட்டுக்குழு முக்கியஸ்த்தரும், பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அலுவலக சிரேஷ்ட உதவியாளருமான நளீர் ஏ. காதர் (ஐ.சீ.ரி இணைப்பு உத்தியோகத்தர்) தெரிவித்தார்.

மேலும், தற்பொழுது வாழைச்சேனை பிரதேச செயலாளராகக் கடமையாற்றும் திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம் கிழக்குப் பிராந்திய பிரதி அஞ்சல் மாஅதிபராகக் கடமையாற்றிய ஆறு வருடகாலத்துள் அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளதாகப் பாராட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

அவரது அயராப் பெருமுயற்சியின் பயனாகவே நிர்மாணம் இடம்பெற்றுவருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

பிரிவுபசார நிகழ்வும், வரவேற்பும்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)