
posted 22nd November 2022
கசிப்பு வியாபாரத்தில் பெண் கைது
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கட்டைக்காடு முள்ளியானில் பெண் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றை தினம் 21/11/2022 வேறு விசாரணைகாக அழைப்பாணை ஒன்றை வழங்க பெண் ஒருவரின் வீட்டிற்கு சென்ற பொலிசார் அங்கு அப் பெண் கசிப்பு விற்றுக் கொண்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
உடனடியாகவே பொலீசார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளதுடன் 10 போத்தல் கசிப்பையும் மீட்டுள்ளனர்.
குறித்த பெண்ணையும், கைப்பற்றப்பட்ட கசிப்பையும், இன்றைய (22) தினம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக மருதங்கேணி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த பெண் கட்டைக்காடு பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவருவதாகவும், பொலிசாரால் பலமுறை கைது செய்யப்பட்டும் கசிப்பு தொழிலை கைவிடவில்லை எனவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமது கிராமத்தில் இடம் பெறும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை தடுத்து அதனால் ஏற்படக் கூடிய பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பொதுமக்கள் பொலிசாரை கேட்டு கொள்கின்றனர்.
மீனவர்களுக்கு தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை
மீனவ மக்களுக்கு மண்ணெண்ணெய் முறையாகவும், தொடர்ச்சியாகவும் விநியோகிப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) கீர்த்தி தென்னகோன் அவர்கள் 22 நவம்பர் 2022 திகதியிடப்பட்ட விசேட அறிவித்தல் கடிதத்தை மாவட்ட செயலாளர்கள், மாகாண கடற்றொழில் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண கூட்டுறவு அமைச்சின் செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
இதன்படி, மீனவர்களின் மண்ணெண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தினமும் 50 எரிபொருள் பவுசர்களை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மீனவர்களின் தேவைக்காக 357 மண்ணெண்ணெய் பவுசர்களை விடுவிக்க கடந்த வாரம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் 206 பவுசர்களே (58மூ) பெட்ரோல் நிலையங்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இதற்காக அரசாங்கம் 33 இலட்சம் டொலர்கள் மேலதிக செலவீனங்களைச் செய்த போதிலும் மீனவ மக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் முறையாக மேற்கொள்ளப்படாததால் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகக் கருதப்படுவதுடன், இதன் மூலம் மக்களின் போஷாக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே மீனவர்களுக்குத் தேவையான எரிபொருளின் அளவு மற்றும் அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டிய பகுதிகளை தீர்மானிக்கும் பொறுப்பு கடற்றொழில் திணைக்களம், கடற்றொழில் அமைச்சு மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண கடற்றொழில் அமைச்சுகள் மற்றும் மாகாண கூட்டுறவு அமைச்சுக்களின் செயலாளர்கள், கடற்றொழில் திணைக்களம், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் மீனவர்களுக்கு தேவையான மண்ணெண்ணையை வழங்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதற்காக தனியார், கூட்டுறவு அல்லது அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் நிலையங்கள் ஊடாகவும் அல்லது கடற்படையினரின் உதவியுடன் மீனவர்களுக்கு தொடர்ந்து மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும் எனவும் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)