
posted 13th November 2022
யானைக்கூட்டத்தால் நாசமாக்கப்பட்ட பயிர்கள்
வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணியில் பெருந்தொகையான பப்பாசி மற்றும் தென்னைமரங்களை யானைகள் அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுங்கேணி புளியங்குளம் பிரதான வீதிக்கு அருகாமையில் சுமார் 8 ஏக்கர் அளவில் பப்பாசிச் செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நேற்று (11) இரவு தோட்டத்தினுள் நுழைந்த யானைகள் அறுவடைப் பருவத்தில் காணப்பட்ட சுமார் 150 க்கும் மேற்பட்ட பப்பாசி மரங்களை முறித்து அழித்துள்ளன.
இதேவேளை, அருகாமையில் உள்ள காணிக்குள் புகுந்த யானைகள் ஒருதொகை தென்னை மரங்களையும் அழித்துள்ளன.
யானை வேலி அமைக்கப்பட்டு இருந்தும் தமக்கு பிரியோசனம் இல்லை என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
அதிகரிக்கப்பட்ட விவசாயக் கடன் உதவி
யாழ். மாவட்ட மரக்கறி செய்கை விவசாயிகளுக்கும் விவசாய கடன் முறைமை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக விவசாய அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று யாழ். அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
மாவட்ட விவசாயக் குழுக்கூட்ட கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் 12.11.2022 அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்குஅவர் மேலும் தெரிவிக்கையில்,
நெல் செய்கை விவசாயிகளுக்கு 40,000 ரூபாவாக இருந்த விவசாய கடன் ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இந்த வருடம் பெரும்போக நெற் செய்கைக்கான உர விநியோகத்தில் 70% இரசாயன உரமும், 30 வீத சேதன உரமும் தெரிவு செய்யப்பட்டதுடன் மாவட்டத்தில் சேதன உர விநியோகத்திற்காக 7 விநியோகத்தர்கள் தயாராகவுள்ளனர்.
உர விநியோகத்தர்களை இனங்கண்டு அவர்களிடம் உள்ள உரத்தின் தரத்தை உறுதி செய்து விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
வெள்ள அழிவு, டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகம், நீர் விநியோகம், விவசாயிகளுக்கான காலநிலை தகவல்கள், உருளைக்கிழங்கு செய்கை, திராட்சை பழ செய்கையில் காணப்படும் நோய்த் தாக்கம், விதை உற்பத்தி மற்றும் விதை உற்பத்தி ஊக்குவிப்பு நடவடிக்கைகள், பால், முட்டை உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கு தொடர்பான மாவட்ட ஒருங்கிணைந்த பொறிமுறையின் 2ஆவது முன்னேற்றக் கூட்டமும் நடைபெற்றது. இதில் கிராம, பிரதேச செயலக , மாவட்ட ரீதியாக தரவுகள் பெறப்பட்டு எதிர்பார்த்துள்ள பெரும்போக விவசாய உற்பத்தி அறுவடை, மரக்கறிகள், கடலுணவு உற்பத்திகள் தொடர்பாகவும் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்படும் சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார் திட்டங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 9 திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)