
posted 4th November 2022

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கடற்படைச் சிப்பாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கண்டியைச் சேர்ந்த சன்னி அப்புக்கே சுரங்க ரொஷாந்த சில்வா (வயது 34) எனும் சிப்பாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கோண்டாவில் உப்புமட பகுதியில் செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோண்டாவில் மேற்கை சேர்ந்த எஸ். விக்னேஸ்வரன் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பெண் மோதி விபத்துக்கு உள்ளானதில் முதியவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நீர்வேலியில் அமைந்துள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒரு பெண்ணும் ஓர் ஆணுமாக இவருர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைதான இருவரிடம் இருந்து 20 லீற்றர் கசிப்பு, 50 லீற்றர் கோடா, கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறுவதாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், அந்த வீட்டை சுற்றிவளைத்த புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட இருவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
சிங்கள அரச பேரினவாதம் அடாவடியாக நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறி மேலிடத்தில் வந்த உத்தரவு என்று சொல்லிக்கொண்டு அடாத்தாக காணிகளை பிடிப்பதை நாங்கள் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
யாழ் . பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வலி. வடக்கு காணி அபகரிப்புக்கு எதிராக போராட்டத்தை 01.11.2022 அன்று முன்னெடுத்தது.
இந்தப் போராட்டத்தின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட வேலன் சுவாமிகள்,
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்திலே எங்களுடைய காணிகள், நிலங்கள் அபகரிக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் கடந்த 74 வருடங்களாக நடைபெற்றுவருகின்றது. இதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
வலி. வடக்கிலே 2500 ஏக்கருக்கு மேற்பட்ட காணி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்கின்றன. எங்களுடைய மக்கள் தாங்கள் வாழ்வதற்கு இடம் இல்லாமல் துன்பப்பட்டுக்கொண்டு விவசாயம் செய்வதற்கு, பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, கடல் வளங்களை பெற்றுக்கொள்வதற்கு வழி இல்லாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய எங்களது பூமியிலே சிங்கள, பௌத்த, அரச பேரினவாத அதாவது அரச இயந்திரம் இங்கு அடாவடியாக நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறி மேலிடத்தில் வந்த உத்தரவு என்று சொல்லிக் கொண்டு அடாத்தாக காணிகளை பிடிப்பதை நாங்கள் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.
இளையோர் சமூகம் பொங்கி எழுந்தால் , மாணவர் எழுச்சி மிகப்பெரிய எழுச்சியாக இருக்கும். இதற்கான ஒரு ஆரம்பம்தான் இன்று நடைபெற்றிருக்கிறது. ஆகவே அனைத்து காணி அபகரிப்புக்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல் இது தொடருமாக இருந்தால் எங்களுடைய மாணவர்கள் பேரெழுச்சியாக வட, கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
இராணுவ, கடற்படை, விமான முகாம்கள் என்று அனைத்தும் முடக்கப்பட்டு எங்களுக்கான போராட்ட வடிவத்தை நாங்களே தீர்மானிக்கின்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். ஆகவே, இந்த இடத்தில் உள்ள காணிகள் அனைத்தும் எங்களுக்கு வேண்டும். இதற்கு எங்கள் ஆதரவையும் வழங்கி நிற்கின்றோம்.
எனவே, இந்த சந்தர்ப்பத்தில் அனைவரையும் எங்களுடன் இணையுமாறும், தொடர்ந்து போராட்டங்களில் கலந்துகொள்ளுமாறு உங்களை வேண்டி நிற்கின்றோம். இந்தியா உட்பட அனைத்து சர்வதேசமும் இதிலே தலையிட்டு உடனடியாக காணி அபகரிப்புக்களை வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தை கூறுபோடுகின்ற முயற்சியை நிறுத்த வேண்டும்.
வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தயக்கத்திலே சுயநிர்ணய அடிப்படையில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதன் ஊடாக அரசியல் தலைவிதியை நாங்களே தீர்மானிக்கின்றோம். இதுதான் எங்களுடைய பிரதானமான வேண்டுகோளாக இருக்கின்றது என்றார்.
வடக்கு மாகாணத்தில் படையினரின் மர்ம மரணங்கள் தொடர்கின்றன.
வடக்கில் இவ்வருடம் இதுவரை 16 படையினரின் (இராணுவம், கடற்படை, விமானப்படை) சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 13 சடலங்கள் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளன,
16 சடலங்களில் 11 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்றும், 2 பேர் சக சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 3 பேர் திடீர் சுகயீனம் காரணமாக இறந்துள்ளனர் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு பகுதியில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்தில் கடமையாற்றும் விமானப்படைச் சிப்பாய் ஒருவர் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் புதன்கிழைமை (02) இரவு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குருநாகல் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சிப்பாயே இவ்வாறு தவறான முடிவெடுத்துள்ளார் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு மரண விசாரணை அறிக்கை பெறப்பட்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலையில் வீட்டிலிருந்து காணாமல் போன வயோதிபர் ஒருவர் தோட்டக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் புதுன்கிழைமை (02) கலட்டி, கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கலட்டி கரணவாய் கிழக்கைச் சேர்ந்த செல்லத்துரை( வயது - 80) எனும் வயோதிபரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் காணாமல்போனதை அடுத்து அவரது உறவினர்களால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிற்பகல் 2 மணியளவில் கரணவாய் பகுதியிலுள்ள கிணற்றில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே. பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலத்தை பிரேதப் பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நெல்லியடிப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் ஆராய அமைச்சர்கள் குழு கள விஜயம் ஒன்றை வியாழக்கிழமை (03) மேற்கொண்டனர்.
இதன்போது கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள குறித்த பொருளாதார மத்திய நிலையத்தைப் பார்வையிட்டதுடன், வர்த்தகர்களுடன் கலந்துரையாடினர்.
தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் வர்த்தகர்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும் அமைச்சர்கள் குழு நடத்தியது.
இந்த விஜயத்தில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலாளர் ஜெயகரன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் அமைச்சர்களின் இணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த அன்னலிங்கம் திருச்செல்வி (வயது-63) என்ற 5 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை மாலை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மறுநாளான நேற்று அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்புக்கு டெங்கு காய்ச்சலே காரணம் என மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
தமிழர் பிரதேசங்களில் போதைப்பொருளை முற்றாக ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராசா அழைப்பு விடுத்துள்ளார்.
போதைப் பொருள் விநியோகத்தின் மையமாக வடக்கு மாகாணம் திகழ்கின்றது என்று நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து மக்களைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. வடக்கில் இளையோரைக் குறிவைத்து போதைப் பொருள் விநியோகிக்கப்படுகின்றது.
பாடசாலை மாணவர்களும் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். எதிர்காலத்தில் எமது சமுதாயத்தை வழிநடத்துபவர்கள் போதைப் பாவனையால் அழிந்து போவதை நாம் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது. இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
வடக்கில் மட்டுமின்றி தமிழர் வாழும் பிரதேசங்களில் போதைப் பொருளை முற்றாக ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

03.11.2022
(photo)எஸ் தில்லைநாதன்
மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலைய கட்டுமான பணிகள் நிறைவு செய்து ஆரம்பிப்பது தொடர்பில் நேற்று (02) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் நேற்று கள ஆய்வில் ஈடுபட்டனர்.
சுமார் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 20 வர்த்தக நிலையங்களை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள வியாபார மத்திய நிலையத்தை விவசாயிகளுக்கும் மக்களும் நன்மையளிக்கும் வகையில் வினைத்திறனாக செயல்படுத்துவது தொடர்பாக துறைசார்ந்த அலுவலர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், கடற்றொழில் அமைச்சின் மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சின் உள்ளிட்ட அதிகாரிகள் விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிகள் ஆகியோருடன் ஆலோசனைகளை நடத்தினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)