
posted 4th November 2022
மனிதனின் உடல் வளர்ச்சிக்கு ஊட்டச் சத்துள்ள உணவு எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றதோ அதே போன்று உள வளர்ச்சிக்கு வாசிப்பு முக்கியமானதாகும். ஆகவே வாசிப்பு பழக்கம் உடைய ஒருவரால் மட்டுமே உடல் உள ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சிகரமாக வாழ முடியும். என்று நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் குறிப்பிட்டார்.
நாவிதன்வெளி பிரதேச சபை தேசிய வாசிப்பு மாதத்தினையொட்டி பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்திய போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் இப் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் தவிசாளர் அ.ஆனந்த தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ. கமல் நெத்மின பிரதம அதிதியாகவும், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன், சவளக்கடை கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர்.ஏ. எம். ஜிப்ரி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
அங்கு பிரதேச செயலாளர் மேலும் பேசுகையில்;
பத்திரிகைகள் சஞ்சிகைகள் புத்ததகங்கள் என்பவற்றை வாசிப்பவர்களின் எண்ணிக்கை இன்று வெகுவாக குறைவடைந்து காணப்படிகின்றது. இது கவலைக்குரிய விடயமாகும். மேலும், சமூகத்தில் கையடக்க தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளது. இது தொற்று நோய்களை ஏற்படுத்துவதுடன் விரும்பத்தகாத செயற்பாடுகள் இடம்பெறவும் காரணமாய் உள்ளது.
நீண்ட வாசிப்பு பழக்கம் உடையவர்களால் மட்டுமே நன்கு கிரகிக்க முடியும். போட்டிப் பரீட்சைகளை இலகுவாக வெற்றி கொள்ள முடியும். நன்கு பேச முடியும் அஃதே எழுதவும் முடியும். மேலாக மகிழ்சிகரமாக வாழவும் முடியும்.
ஒரு நூலகம் திறக்கப்படுமானால் சிறைக்கூடங்கள் மூடப்படும். குற்றச் செயல்கள் குறையும் என்பார்கள். வாசிக்காதவர்களே அதிக குற்றம் புரிபவர்களாகவும் சிறை செல்பவர்களாகவும் உள்ளனர் என்று கூறப்படுகின்றது. இவ்வாறு சிறை சென்ற பலர் சிறையில் இருந்து வாசித்து அரியபல நூல்களை எழுதிய வரலாறுகளும் உண்டு.
வாசிப்பு பழக்கம் உடையவர்கள் மரணத்தை தழுவும் வேளையிலும் நிம்மதியுடன் மரணிக்கின்றனர். ஆனால் வாசிப்பு பழக்கம் அற்றவர்கள் உள நோய்களுக்கு ஆளாகி மரணத்தை தழுவும் போதும் நிம்மதியற்று மரணிக்கும் நிலை உண்டு என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)