நடக்குமா, நடக்காதா?

இலங்கையில் எதிர்வரும் 2023 மார்ச் மாதத்துடன் முடிவடைய விருக்கும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் நடத்துமா? அல்லது நடத்தாது ஒத்திவைக்கப்படுமா? என்ற சர்ச்சை நாட்டில் சூடுபிடித்துள்ளது.

ஆளும் தரப்பை விடவும் எதிர்க்கட்சிகள் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட்டே ஆக வேண்டுமெனப் பொது வெளியில் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன.

இருப்பினும், திடீரென அரசு உள்ளுராட்சிமனற் உறுப்பினர்களின் தற்போதய தொகையைக் குறைக்க வேண்டுமெனவும், அதற்காக புதிதாக எல்லை நிர்ணயம் (வட்டாரங்ளின்) செய்யப் போவதாகவும் கூறி இதற்காக குழு ஒன்றையும் நியமித்துள்ளது.

இந்த விவகாரம் பலத்த சந்தேகத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளதுடன், உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலை உரிய வேளையில் நடத்தாது பிற்போடும் அரசின் சூழ்ச்சியாக இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதென எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

அரசாங்கம் தேர்தலுக்குச் செல்லத் தயாரில்லை, அதனை விரும்பவும் இல்லை. அது நடக்கக் கூடாது என்பதற்காகவே முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைவமையில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயக் குழுவை நியமித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமனற் உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேவேளை உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலம் 2023 மார்ச் 20 ஆம் திகதியுடன் முடிவடைவதாகவுள்ளமை அதில் ஒருவருடகால (ஏற்கனவே) நீடிப்பும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதனை முறையாக நடத்துவதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தேர்தல் ஒன்றை எதிர்பார்த்து நாட்டின் சில கட்சிகள் ஆதரவாளர்களை விழிப்பூட்டி தயார்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக வடக்கு கிழக்கில் தேர்தல் காய்ச்சல் பலரைப் பீடிக்கத் தொடங்கியுள்ளதுடன் இந்த நடவடிக்கைகளில் முஸ்லிம் கட்சிகள் உசாரடைந்தும் உள்ளன.

எது எப்படியோ தேர்தல் ஒன்று அதுவும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வருமா வராதா என்பதே பலரதும் எதிர்பார்ப்பும், ஆதங்கமுமாகவுள்ளது.

பொறுத்திருப்போம், காலம் பதில் சொல்லட்டும்!

நடக்குமா, நடக்காதா?

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)