
posted 9th November 2022
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெரும்போக நெற் செய்கையும் பாதிப்புறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வளிமண்டலத்திலேற்றபட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாகத் தொடர் மழை பெய்து வருவதால், இந்த மாவட்டத்தில் ஆறுகள், குளங்கள் நிரம்பத் தொடங்கியுள்ளதுடன், தாழ்ந்த பிரதேசங்களில் மழை, நீர் தேங்கி வெள்ளப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த மாவட்டத்தின் முக்கிய விவசாயப் பிரிவுகளில் பெரும்போக நெல் விதைப்பு மும்முரமாக இடம்பெற்று வந்த நிலையில் விதைத்த நெற்காணிகளும் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றது.
மழை தொடர்ந்து வெள்ள நீர் தேங்கினால் விதைத்த நெற்பயிர்கள் பாதிப்படையும் அபாயமுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், தொடர்ச்சியான மழை காரணமாக பல குடியேற்றக் கிராம மக்கள் கல்முனை மாநகரையும், வைத்தியசாலைகளையும் வந்தடைய பயன்படும் சவளக்கடை வீதியின் தாம்போதி ஊடாக வெள்ளம் பாயத் தொடங்கியுள்ளது.
இதனால் பெரும் சிரமங்களுடனேயே இந்த வீதியூடாகப் பயணிக்க வேண்டிய நிலமையும் ஏற்பட்டுள்ளது.
தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் சவளக்கடை தாம்போதியில் வெள்ளம் அதிகரிக்குமானால், மக்களின் போக்குவரத்து தடைப்படலாமெனவும் பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மழை தொடரும் சாத்தியமே தென்பட்ட வண்ணமுள்ளதுடன் சில தினங்களுக்கு மழை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களமும் எதிர்வு கூறியுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)