
posted 19th November 2022
நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் நாடளாவிய ரீதியில் தேர்தல் ஒன்றுக்கான கால்கோள் இடப்பட்டு வருகின்றது.
குறிப்பாக அடுத்த வருட முற்பகுதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறலாமென்ற நம்பிக்கை தற்பொழுது வலுத்துவருகின்றது.
இந்தத் தேர்தலையாவது நடத்தியே ஆகவேண்டுமென எதிர்க்கட்சிகள் வரிந்துகட்டி நிற்கும் நிலையில் ஜனாதிபதியும், அரசும் இத்தேர்தலை நடத்துவதில் விருப்பமின்மையுடனேயே செயற்படுவதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
உள்ளுராட்சி வட்டாரங்களின் எல்லை நிர்ணயம் உட்பட உள்ளுராட்சி உறுப்பினர்களின் தொகையைக் குறைக்கும் நோக்குடன் ஜனாதிபதியால் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி சந்தேகமும் வலுப்பெற்றிருக்கின்றது.
இதேவேளை பிரதான எதிரக்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் அடங்கலாக மொத்தம் பதினாறு தரப்புகள் தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ள நிலையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறும் இக்கட்சிகள் சார்பில் மகஜர் ஒன்றும் ஆணைக்குழுவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டின் அரசியலமைப்பிலுள்ள சட்ட விதிமுறைகளுக்கேற்ப எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமக்கு உறுதியளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில் தேர்தல் ஒன்றுக்குத் தயாராகும் முன்னெடுப்புக்களில் கட்சிகள் ஈடுபட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
எது எப்படியிருப்பினும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறலாமென்ற நம்பிக்கை வளர்த்துவரும் நிலையிலும், நாட்டின் ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக இருப்பதால் இறுதி நேரத்தில் என்னதான் நடக்கப்போகின்றதோ என்ற அங்கலாய்ப்பும் மக்களிடையே மேலோங்கி நிற்கின்றது.
உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் நடக்குமா? அல்லது மீண்டும் பிற்போடப்படுமா? என்பதே இன்றைய இலங்கையின் அரசியல் களத்தில் பேசுபொருளாக உருவெடுத்து நிற்கின்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY