
posted 7th November 2022
உத்தேச தேர்தல் சட்ட மறுசீரமைப்புக்கள் குறித்து விழிப்புணர்வூட்டுவதற்கான கருத்தரங்கு ஒன்று அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ.விக்கிரம மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (11) இந்த கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
தேர்தல் சட்டமறுசீரமைப்புக்கள் குறித்த விசேட பாராளுமன்ற தெரிவுப்புக்குழுவினல் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் சட்ட மறுசீரமைப்பிற்கான முன்மொழிவுகளை துரிதமாக சட்ட வாக்கப்படுத்துவதற்குத் தேவையான சமூகப் பின்புலத்தை அமைப்பதற்கும் மற்றும் அது குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்து முகமாகவும் அம்பாறை மாவட்டத்திற்கான இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த கருத்தரங்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா, மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறிரத்நாயக்க ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் கசுன் சிறீநாத் அத்த நாயக்க செய்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)