தேசிய ரீதியில் முதலிடம்

இலங்கை கலாச்சார அலுவல்கள் திணைக்களம் தேசிய ரீதியில் நடத்திய இலக்கியப் போட்டியின் திறந்த சிறுகதைப் போட்டியில், அம்பாறை மாவட்டம் நிந்தவூரைச் சேர்ந்த ஹஸன் குத்தூஸ் முஹம்மட் ஜெம்சித் ஹஸன் முதலிடம் பெற்றுள்ளார்.

புத்த சாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த தேசிய இலக்கிய விருது வழங்கும் விழாவில், இவர் முதலிடம் பெற்றமைக்கான விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

குறித்த தேசிய இலக்கிய விருது வழங்கும் விழா, இலங்கை ஜனநாயக சோஷலிஷக் குடியரசின் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் கடந்த 17 ஆம் திகதி கொழும்பு – 17, பண்டார நாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த தேசிய இலக்கிய விருது வழங்கும் விழாவுக்காக பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டித் தொடரின் சிறுகதைப் போட்டியிலும், நிந்தவூர் பிரதேச செயலக மட்டங்களில் ஜெம்சித் ஹஸன் முதலிடங்களையே பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நிந்தவூர் கலை இலக்கியப் பேரவையின் முக்கிய உறுப்பினரான ஜெம்சித் ஹஸன் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றமையை மேற்படி பேரவை உட்பட பலரும் பாராட்டியுள்ளனர்.

ஜெம்சித் ஹஸன் ஏற்கனவே தேசிய, மாவட்ட, பிரதேச மட்ட இலக்கியப் போட்டிகளிலும் பங்குகொண்டு விருதுகளைப் பெற்றவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

வெற்றிபெற்றோர் விபரம்

இலங்கை கலாச்சார அலுவல்கள் திணைக்களம் தேசிய இலக்கியக் கலையை மிளிரச் செய்யும் நோக்குடன் நடத்திய இலக்கிய போட்டியில், தேசிய ரீதியில் சிறுகதை மற்றும் கவிதை ஆக்கத்தில் வெற்றி பெற்றோர் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி திறந்த பிரிவு சிறுகதைப் போட்டியில், அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த ஹஸன் குத்தூஸ் முகம்மட் ஜெம்சித் ஹஸன் முதலிடத்தையும்,

கேகாலை மாவட்டம், யட்டியந்தோட்ட பிரதேச செயலகப்பிரிவுகந்தன் முருகேசு இரண்டாம் இடத்தையும்,

யாழ்ப்பாண மாவட்டம், வலிகாமம் வடக்க பிரதேச செயலகப்பிரிவைச் சேர்ந்த மாலாதேவி மதிவதனன் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

அதேபோல், தேசிய ரீதியிலான திறந்த பிரிவு கவிதை ஆக்கம் போட்டியில் திருகோணமலை மாவட்டம், பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சிவசங்கரன் முதலாமிடத்தையும்,

மட்டக்களப்பு மாவட்ம் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவைச் சேரந்த முஹம்மது ஹனிபா பாத்திமா சஸ்னா இரண்டாமிடத்தையும்,

வவுனியா மாவட்டம், வவுனியா பிரதேச செயலகப் பிரிவைச் சேரந்த நாகலிங்கம் தியாகராசா மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

வெற்றியீட்டிய இவர்களுக்கான விருதுகளும், சான்றிதழ்களும் கொழும்பில் நடைபெற்ற தேசிய இலக்கிய விருது வழங்கும் விழாவில் வழங்கிவைக்கப்பட்டன.

கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் மேற்படி விருது வழங்கும் விழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

தேசிய ரீதியில் முதலிடம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)