
posted 15th November 2022
“கிழக்குப் பிராந்திய முன்னாள் அஞ்சல் மா அதிபர் திருமதி. ஜெயானந்தி திருச் செல்வத்தின் ஆறு வருட சேவைக்காலப் பணிகள் என்றும் நினைவு கூரத்தக்கவையாகும். பிராந்திய அஞ்சல் குடும்பத்தின் நல்லபிமானத்தை வென்றவர் அவராவார்.”
இவ்வாறு, அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர் சங்கத்தலைவரும், அக்கரைப்பற்று அஞ்சல் அத்தியட்சகர் அலுவலக பிரதம இலிகிதருமான யூ.எல்.எம். பைஸர் புகழாரம் சூட்டினார்.
கிழக்குப் பிராந்திய முன்னாள் பிரதி அஞ்சல்மா அதிபரும், வாழைச்சேனை பிரதேச செயலாளருமான திருமதி. ஜெயானந்தி திருச்செல்வத்திற்கான பிரிவுபசாரமும், புதிய பிராந்திய அஞ்சல் மா அதிபர் காமினிவிமல சூரியவை வரவேற்கும் ஒன்றிணைந்த நிகழ்வு நிந்தவூரில் நடைபெற்றது.
நிகழ்வுக்குத் தலைவமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட அஞ்சல் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பிரதேச அஞ்சல் அதிபர்கள் உப அஞ்சல் அதிபர்கள், ஏனைய அஞ்சல் பணியாளர்களின் பங்குபற்றுதலோடு நடைபெற்ற நிகழ்வில் பிரதேச அஞசல் அத்தியட்சகர்கள் மற்றும் அஞ்சல் திணைக்கள உயரதிகாரிகள் பலரும் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், மீராநகர் உப அஞ்சல் அதிபர் கே.றிப்கா, வாழ்த்துக் கவிதை ஒன்றை வாசித்து முன்னாள் பிரதி அஞ்சல் மா அதிபர் திருமதி ஜெயனந்தி திருச்செல்வததிற்கு பிரிவுபசார வாழ்த்துப்பத்திரத்தை வழங்கியதுடன் கலை நிகழ்ச்சிகள் பலவும் இடம்பெற்றன.
அத்துடன், பிரதம அதிதி திருமதி. ஜெயானந்தி திருச் செல்வத்திற்கு, அன்னாரது சேவையைப் பாராட்சி பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னமாக தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டதுடன், புதிய பிரதி பிராந்திய அஞ்சல்மா அதிபர் காமினி விமல சூரியவை வரவேற்கும் வண்ணம் பொன்னடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கதலைவர் பைஸர் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“முன்னாள் கிழக்குப் பிராந்திய அஞ்சல்மா அதிபர் திருமதி. ஜெயானந்தி திருச்செல்வத்தின் சேவைகள் அஞ்சல் சமூகத்தால் என்றும் மறக்க முடியாதவைகளாகும்.
மக்கள் நல்லபிமானம் வென்ற அவர் பிரதி அஞ்சல்மா அதிபராகப் பணியாற்றிய காலத்தில் பாரபட்சமின்றி பிராந்தியத்தின் சகல பிரதேசங்களிலும் தமது சேவைகளை முன்னெடுத்தார்.
இதனடிப்படையில் எமக்குக் கிடைத்த ஓர் மகிழ்ச்சியான பிரதி அஞ்சல்மா அதிபராக அவர் திகழ்ந்ததுடன், சகல பிரச்சினைகளையும் சுமுகமாக அணுகி தீர்வுகளை வழங்கி வந்தார்.
மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அஞ்சல் திணைக்கள கட்டிடத்தொகுதியைப் பெற்றுத்தந்த பெருமைக்குரியவர் அவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
அதேபோல் தற்சமயம் எமது பிராந்தியத்தின் பிரதி அஞ்சல்மா அதிபர் காமினி விமல சூரியவும் சிறந்த நிருவாகியாகவும், சேவைமனப்பாங்கு கொண்ட செயல் வீரனாகவும் திகழ்கின்றார்” என்றார்.
அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அலுவலக உதியாளரும், ஐ.சி.ரி. இணைப்பு உத்திதயொகத்தருமான விழாக்குழு செயலாளர் ஏ.சீ. நளீர். நிகழ்வில் நன்றியுரையாற்றினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)