ஜனாஸா எரிப்பு விவகாரம் - ஆணைக்குழு வேண்டும் என்றார் ஹக்கீம்

“உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலையும் புறந்தள்ளி கொவிட் காலத்தில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட படுபாதகச் செயலின் பின்னணி தொடர்பில் கண்டறிய ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி நியமிக்க முன்வர வேண்டும்”

இவ்வாறு, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30 ஆவது பேராளர் மாநாட்டில் தலைமைப் பேருரையாற்றுகையிலேயே அவர் இக்கோரிக்கையை விடுத்ததுடன், இதனை மாநாட்டுத் தீர்மானமாக நிறைவேற்ற முன்மொழிவதாகவும் கூறினார்.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30 ஆவது பேராளர் மாநாடு புத்தளம் கே.ஏ. பாயிஸ் ஞாபகர்த்த மண்டபத்தில் கடந்த திங்கட் கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமைப் பேருரையாற்றுகையில் மேலும் பின்வருமாறு கூறினார்.

“இந்த நாட்டில் கடந்த ஆட்சியினரால் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகப் பெரும் நெருக்கடிகள், படுபாதகச் செயல்கள் தோற்று விக்கப்பட்டு பெரும் துன்ப நிலைக்குத்தள்ளப்பட்டோம்.

ஒரு பயங்கரவாத (சஹ்ரான்) படுபாவியின் செயலை அடிப்படையாக வைத்து, திட்டமிட்ட வகையில் முஸ்லிம் சமூகத்தின் மீது அபாண்டபழிகள் சுமத்தப்பட்டதுடன், தாங்கொணா நெருக்கடிகளும், கொடுமைகளும் நடத்தப்பட்டன.

ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாகக் கைது செய்தும், நிறைய முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டும் ஏவி விடப்பட்ட அராஜகம் தலைவிரித்தாடியது.

மிகப் படுமோசமான ஆட்சியினரின் இந்த அராஜக அநியாயத்தின் உச்சமாக கொவிட் காலத்தில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட பெரும் துயர சம்பவங்கள் நிகழ்ந்தன.

முஸ்லிம்களே நோயைப் பரப்புவதாகக் கூறி மாதக் கணக்கில் முஸ்லிம் பிரதேசங்கள் முடக்கப்பட்ட துயர சம்பவங்களும் நிகழ்ந்தன.

கொவிட் ஜனாஸாக்களை எரிக்கவோ, அடக்கம் செய்யவோ முடியுமென உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியும் முஸ்லிம்கள் பெரும் துயருறும் வகையில் வலுக்கட்டாயமாக ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன.

முஸ்லிம் நாடுகள், நாடுகளின் தூதுவர்கள் ஜனாஸா எரிப்பை நிறத்துமாறு விடுத்த கோரிக்கைகளை குப்பைத்தொட்டியில் போட்ட அப்போதய ஜனாதிபதியின் நயவஞ்சகத்தனத்திற்கான பலனை அவரே அனுபவிக்க வேண்டிய நிலமை எம் கண்முன்னே ஏற்பட்டது.

இதன் எதிரொலியாகவே இம்முறை ஐ.நா. சபையில் இலங்கைக்கு ஆதரவளிக்க அரபு நாடுகள் முன்வரவில்லை.

இந்த அநியாயத்தை முஸ்லிம் சமூகம் மறக்கவில்லை, காலம் காலமாக இந்த வடு எம் மத்தியில் இருந்து கொண்டேயிருக்கும்.

எனவே இந்த கட்டாய ஜனாஸா எரிப்பு அநீதியின் பின்னணி கண்டறியப்பட வேண்டும். இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும்.
இதற்காக ஆணைக்குழு ஒன்றை நியமிக்க இன்றைய ஜனாதிபதி உடன் முன்வரவேண்டுமெனக் கோருகின்றோம்.

இதன் மூலம் இப் படுபாதகச் செயலுக்குப் பின்னாலிருந்த அரசியல் வாதிகள், துணைபோன வைத்தியர்கள், சுகாதாரத்துறையினர் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

மேலும் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் காங்கிரஸ் முழு ஆதரவை வழங்கும்.

ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தை வைத்துக் கொண்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை அடக்கமுனையும், பொலிஸ் பயங்கரவாதம், இராணுவ பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படும் செயற்பாடுகளுக்கு ஒரு போதும் ஆதரவளிக்கமாட்டோம்.

இன்று நடுத்தரவர்க்கத்தினரை நசுக்கியுள்ள வரிச்சுமை, பசிபட்டியினால் மக்கள் வாடும் நிலைமைகள், விவசாயிகளின் நிலமைகள் என்பவற்றையெல்லாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது” இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாஸா எரிப்பு விவகாரம் - ஆணைக்குழு வேண்டும் என்றார் ஹக்கீம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)