
posted 23rd November 2022
அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் "மண்ணின் மகுடம்" சாதனையாளர் கௌரவிப்பு விழா டிசம்பர் மாதம் முற்பகுதியில் இடம்பெற உள்ளது.
2022 ம் ஆண்டு தேசிய மட்ட கபடி விளையாட்டு போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்கள் நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் "மாணவர் மகிமை" வேலைத் திட்டத்தின் கீழ் பாராட்டி கௌரவிக்கப்பட உள்ளனர்.
நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி (ஜே.பி.) தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச். ஈ. எம். டபிள்யூ. ஜி. திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
இதன் போது கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட நிந்தவூர் கமு/கமு/ அல் - மதீனா மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) மற்றும் நிந்தவூர் கமு/ கமு/ அல் - அஷ்ரக் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஆகியவற்றில் இருந்து அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கபடி விளையாட்டு போட்டியில் வரலாற்று வெற்றியை ஈட்டி சாதனை படைத்த மாணவர்கள் நினைவுச் சின்னங்கள், பரிசில்கள், மற்றும் சான்றிதழ்கள், பதக்கங்கள் அணிவித்து பாராட்டி கௌரவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
நிந்தவூர் மண்ணில் இடம்பெற இருக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது (ஜே.பி) உட்பட பாடசாலை அதிபர்கள், கல்வி உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)